பெண் சார்பதிவாளரிடம் இருந்து கட்டுக்கட்டாக கையூட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சங்ககிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் கையூட்டு ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையில், பெண் சார்பதிவாளரிடம் இருந்து கட்டுக்கட்டாக கையூட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் சங்ககிரி சந்தைப்பேட்டையில் பத்திரப்பதிவுத்துறை சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. சங்ககிரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த அலுவலகத்தில் பத்திரப் பதிவு, திருமணப்பதிவு செய்யவும், வில்லங்க சான்றிதழ் பெறுதல் போன்ற பணிகளுக்காகவும் வந்து செல்வர். இதுபோன்ற சேவைகளைப் பெற வருவோரிடம் சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் ஒவ்வொரு சேவைக்கும் குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து கையூட்டு பெற்று வந்தனர். இதுகுறித்து சேலம் கையூட்டு ஒழிப்புப் பிரிவு காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதையடுத்து, வெள்ளிக்கிழமை (நவ. 1ம் தேதி) மாலை, கூடுதல் கண்காணிப்பாளர் (ஏடிஎஸ்பி) சந்திரமவுலி தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர், சார்பதிவாளர் அலுவலகம் அருகே சென்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் அலுவலகம் பூட்டும் நேரத்தில் அவர்கள் அனைவரும் திடீரென்று அலுவலகத்திற்குள் புகுந்து சோதனையில் ஈடுபட்டனர். பணியில் இருந்த சார்பதிவாளர் இந்திராகாந்தி, தலைமை எழுத்தர் ஜெகதீசன், இளநிலை உதவியாளர் உமா மகேஷ்வரி, கணினி இயக்குநர் சசிகலா, மனோஜ்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். சார்பதிவாளர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்ததில் அதில் மதிய உணவு பாத்திரம் இருந்தது. அந்த பாத்திரத்திற்குள் ரப்பர் பேண்டால் சுற்றப்பட்டு சிறு சிறு கட்டுகளாக பணம் இருந்தது. அவற்றைக் கைப்பற்றினர். எண்ணிப்பார்த்தபோது, 39500 ரூபாய் இருந்தது. மற்ற ஊழியர்களிடம் இருந்து கணக்கில் வராத 21500 ரூபாய் கைப்பற்றப்பட்டது. அவர்களிடம் இருந்து மொத்தம் 61 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. நாள்தோறும் சேரும் கையூட்டுத் தொகையை அவரவர் பதவி நிலைக்கு ஏற்ப, பணி முடிந்து வீடு திரும்பும்போது பங்கிட்டுக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். இதையடுத்து சார்பதிவாளர் இந்திராகாந்தி, மற்ற ஊழியர்களான ஜெகதீசன், உமாமாகேஷ்வரி, சசிகலா, மனோஜ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் சார்பதிவாளர் இந்திராகாந்தி, ஏற்கனவே இதுபோல் கையூட்டு வழக்கில் பிடிபட்டவர் என்பவர் குறிப்பிடத்தக்கது. அவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சார்பதிவாளராக பணியாற்றியபோது, இதேபோன்ற வழக்கில் சிக்கியுள்ளார். அப்போது அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இப்போதும், மீண்டும் அவர் லஞ்ச வழக்கில் சிக்கியிருப்பது அத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்