ரஜினிகாந்த், தம்மை வாழ வைத்த தமிழக மக்களுக்கு விருதை அர்ப்பணிப்பதாகக் கூறினார்.

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருதை பெற்றுக்கொண்ட ரஜினிகாந்த், தம்மை வாழ வைத்த தமிழக மக்களுக்கு விருதை அர்ப்பணிப்பதாகக் கூறினார். 50வது கோவா சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி வரும் 28ம் தேதி வரை மொத்தம் 9 நாட்கள் நடைபெறவுள்ளது. விழாவை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கோவா முதலமைச்சர் பிரமோத் சவாந்த், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தனர். பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் தொகுத்து வழங்க, முதற்கட்டமாக இசையமைப்பாளர் சங்கர் மகாதேவனின் இன்னிசை நிகழ்ச்சி ரசிகர்கள் செவிகளுக்கு விருந்தாய் அமைந்தது. இதனைத்தொடர்ந்து இந்திய திரைத்துறைக்கு சேவை ஆற்றியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு 'Icon of Golden Jubilee' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் விருதை வழங்க, நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். விருது பெற்ற பின்னர் மேடையில் பேசிய ரஜினிகாந்த், தமக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். இந்த விருதை தம்மை வாழ வைத்த தெய்வங்களாகிய தமிழக மக்கள், திரைத்துறையினருக்கு சமர்ப்பிப்பதாக அவர் கூறினார். இந்த விழாவில் சர்வதேசம், இந்தியன், பனோரமா உள்ளிட்ட பிரிவுகளில் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. ஈரான், கொரியா, பிரான்ஸ் உள்ளிட்ட 76 நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களும், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளைச் சேர்ந்த 41 திரைப்படங்களும் சர்வதேச திரைப்பட விழாவை அலங்கரிக்க உள்ளன. இயக்குநர் பார்த்திபன் இயக்கி நடித்த "ஒத்த செருப்பு". லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி ஹவுஸ் ஓனர் ஆகிய தமிழ் திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற அமிதாப் பச்சனை கௌரவிக்கும் வகையில் அவர் நடித்த 6 படங்கள் திரையிடப்படுகின்றன. இதேபோன்று பொன்விழா ஆண்டையொட்டி சிறந்த 12 திரைப்படங்களின் வரிசையில் கே.பாலசந்தர் இயக்கிய 'இரு கோடுகள்' திரைப்படமும் திரையிடப்படுகிறது. விழாவில் திரை நட்சத்திரங்கள், இசையமைப்பாளர்கள், திரைப்பட தொழில்நுட்பக் குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.