மக்களவையில் திமுக.எம்பி கனிமொழி சரமாரி கேள்வி!

உயர் கல்வி நிறுவனங்களில் சாதி, மத பாகுபாடு நிலவுவதாகவும், சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கு அதுவே காரணம் என்றும் மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவையில் இன்று பேசிய கனிமொழி, உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடம் சாதி பாகுபாடு காட்டப்படுவதாகவும் அது தொடர்பாக 72 வழக்குகள் பதிவாகியுள்ளதை, நாடாளுமன்றத்தில் அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் ஐஐடி-யில் 52 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் கனிமொழி கூறினார். மாணவி பாத்திமாவின் தற்கொலை மர்மான முறையில் நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஃபாத்திமாவின் விடுதி அறைக்குள் அவரது பெற்றோர் சென்றபோது, அந்த அறை முழுவதும் சுத்தம் செய்யப்பட்ட நிலையில் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். தவறிழைத்தவர்களின் பெயர்கள், மாணவியின் செல்ஃபோனில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், FIR-ல் இது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படாததும், இதுவரை யாரும் கைது செய்யப்படாததும் ஏன் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மாணவி தற்கொலை குறித்து அறிக்கை அளிக்கக் கோரி சென்னை ஐஐடி-க்கு உயர் கல்வித் துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். எனினும், அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.