வங்கி கணக்கில் ஒரே நாளில் ரூ.88 ஆயிரம் `லபக்’

நாங்குநேரி அருகே வடக்கு விஜயநாராயணத்தில் விவசாயி மனைவியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, விவசாயியின் வங்கி கணக்கில் ஒரே நாளில் ரூ.88 ஆயிரம் அபேஸ் செய்த மர்மநபரை போலீசாரை தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே வடக்கு விஜயநாராயணம் கீழத்தெருவை சேர்ந்தவர் முத்துசாமி(46) விவசாயி. இவரது மனைவி முத்துசெல்வி(45). இவருக்கு திசையன்விளையில் உள்ள வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. கடந்த சில நாட்களுக்குமுன் முத்து செல்வியின் ஏடிஎம் கார்டு தவறான செயல்பாட்டால் அதனை பயன்படுத்த முடியாமல் செயல் இழந்துவிட்டது. இதுகுறித்து முத்துசெல்வி தனக்கு தெரிந்த நபர்களிடம் கூறி புலம்பியதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 20ம்தேதி முத்துசெல்வியின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தன்னை வங்கி ஊழியர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டதுடன், உங்களது ஏடிஎம் கார்டு தவறாக பயன்படுத்தியதால் லாக் ஆகிவிட்டது. அதனை சரி செய்ய வேண்டும். அதனால் அதற்கு ஜாமீனாக உங்கள் கணவர் பெயர், செல்போன் மற்றும் வங்கி கணக்கு எண், ஏடிஎம் கார்டு எண் ஆகியவற்றை கூறுங்கள் என கேட்டுள்ளார். வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்ததால் முத்துசெல்வியும் சந்தேகம் ஏற்படாமல் போனில் பேசிய நபர் கேட்ட அனைத்து விவரங்களையும் தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து மறுநாள் வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்ததில் முத்துசெல்வியின் கணவர் முத்துசாமி வங்கி கணக்கில் இருந்து ரூ.88 ஆயிரம் பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வங்கி அலுவலர்கள், இதுதொடர்பாக முத்துசாமியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது அப்படி பணம் ஏதும் எடுக்கவில்லை என்பதும், வங்கியில் இருந்து மர்மநபர் பேசிய தகவலையும் அவரிடம் ஏடிஎம் கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை மனைவி முத்துசெல்வி கொடுத்த விபரம் தெரியவந்தது. முத்துசெல்வியிடம் போனில் பேசிய மர்மநபர், வங்கி ஊழியர் பேசுவதாக கூறி ரூ.88 ஆயிரத்தை சுருட்டி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து முத்துசாமி தனது வங்கி கணக்கில் மீதம் இருந்த ரூ.10 ஆயிரத்தை உடனடியாக எடுத்தார். இதனால் அந்த பணம் தப்பியது. இதுகுறித்து முத்துசாமி அளித்த புகாரின்பேரில் விஜயநாராயணம் சப்-இன்ஸ்பெக்டர் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகிறார். வங்கி நிர்வாகம், தங்கள் வாடிக்கையாளரிடம் செல்போன் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட எந்தவொரு ரகசிய எண்ணையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஒரே ரகசிய எண்ணை நீண்டகாலமாக பயன்படுத்துவதை தவிர்த்து அடிக்கடி மாற்றம் செய்து வந்தால் மோசடி நபரிடம் சிக்காமல் தப்பிக்கலாம் என புதுப்புது யோசனைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ஆனாலும் பெண்கள் மற்றும் முதியவர்களை குறிவைத்து அவர்களது கவனத்தை திசைதிருப்பி மோசடி நபர்கள், நூதன முறையில் பணம் சுருட்டி வருகின்றனர். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வங்கி சேவை தொடர்பாக தங்களது சுயவிபரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தால் மட்டுமே மோசடியை தடுக்க முடியும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு