அழுது புரண்ட ஆசிரியை..! மிரண்டு ஓடிய மாணவன்..! அரசுப் பள்ளி பரிதாபம்.

திண்டுக்கல்லில் நடந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கில், மாணவர்களே இல்லாத பள்ளியில் பணிபுரிந்துவரும் தன்னை இடமாற்றம் செய்யக்கோரி, தலைமை ஆசிரியை ஒருவர் தரையில் அழுது புரண்டு அடம்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போதைக்கு அடிமையானவர் போல தரையில் படுத்து உருளும் இவர், மாதம் 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளமாக பெறும் அரசு பள்ளி தலைமை ஆசிரியை என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா ? நம்பித்தான் ஆக வேண்டும்..! அவரின் சோகம் அப்படிப்பட்டது..! திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதலின் போது நடந்த கூத்து தான் இந்த பரிதாபக் காட்சி..! குஜிலியம்பாறை ஒன்றியம் அய்யம்பட்டியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக தலைமை ஆசிரியையாக உள்ள இந்திரா தான் இந்த பரிதாப நிலைக்கு உள்ளானவர். கவுன்சிலிங் நடத்த வந்தவர்கள் பஞ்சாயத்து தலைவர்கள் போல ஒய்யாரமாக அமர்ந்திருக்க, அவர்களிடம் பணியிடமாறுதல் கேட்டு மனு அளித்துள்ளார் தலைமை ஆசிரியை இந்திரா. அதில், தான் பணிபுரியும் அரசு தொடக்கப் பள்ளியில் இரண்டு மாணவர்கள் மட்டுமே படித்து வந்ததாகவும் தற்போது அவர்களும் பள்ளிக்கு வருவதில்லை என்பதால் எப்படியாவது தன்னை வேறு பள்ளிக்கூடத்திற்கு மாற்றும்படி மனு கொடுத்தும், நடவடிக்கை எடுக்க மறுத்ததால் அழுது புரண்டு இடமாறுதல் கேட்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார் ஆசிரியை இந்திரா..! கடந்த காலங்களில் தங்களுக்கு சம்பளம் போதாது என்று போராடிய தொடக்கப் பள்ளி ஆசிரியர்களில் பலரும், தங்கள் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து போவதற்கு என்ன காரணம் ? என்பதை சிந்தித்து பார்க்கவில்லையோ ? என்று எண்ணத் தோன்றுகிறது. அரசுப் பள்ளியில் தரமான ஆங்கில வழிக்கல்வி இல்லாததுதான் காரணம் என்று அனைவரும் சுட்டிக்காட்டினாலும், அரசுப் பள்ளி கல்வியின் தரம், ஆசிரியர்கள் அளிக்கும் பயிற்சி ஆகியவையும் பள்ளிக்குப் பள்ளி வேறுபடுகின்றது என்கின்றனர் கல்வியாளர்கள் உதாரணமாக, சென்னை திருவல்லிக்கேணியில் தனியார் பள்ளி ஒன்றில் 2-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனின் ஆங்கிலப் புலமை அசாத்தியமானதாக உள்ளது. அருகில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனின் ஆங்கில அறிவோ, ஆசிரியர்களின் தரத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது மாணவர்களை பாரமாக நினைக்காமல், மொழித்திறனை வளர்த்து, முன்மாதிரி மாணவனாக்க உத்வேகம் கொடுக்கும் அரசுப் பள்ளிகளில் இன்றும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் போட்டி போட்டுச் சேருவதை காணமுடிகின்றது என்கின்றனர் கல்வியாளர்கள். அதே நேரத்தில் தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்கத் தவறும் அரசுப் பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகளுக்கு, வருங்காலத்தில் நடக்க உள்ள விபரீதத்தின் நிகழ்கால சாட்சியாகி உள்ளார் தலைமை ஆசிரியை இந்திரா என்பதே கசப்பான உண்மை.