அயோத்தியில் தாக்குதல் பயங்கரவாதிகள் 7 பேர் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள சமயத்தில், உ.பி.,யில் அயோத்தி உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. அயோத்தியில், தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் 7 பேர் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நேபாளம் எல்லை வழியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 7 பேரும், உ.பி., மாநிலத்திற்குள் நுழைந்து, கோரக்பூர், அயோத்தி ஆகிய மாவட்டங்களில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதில், 5 பயங்கரவாதிகள் அடையாளம் தெரிய வந்துள்ளதாக கூறிய உளவுத்துறை, இவர்கள் முகமது யாகூப், அபுஹம்சா, முகமது ஷாபாஸ், நிஷார் அகமது, முகமது கவுமி சவுத்ரி என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அயோத்தி வழக்கில், வரும் 17 ம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாக இருப்பதால், தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள், ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. எனவே, அயோத்தி மற்றும் முக்கிய பகுதிகளில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் உத்தரபிரதேச மாநிலம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அயோத்தியில் பாதுகாப்பை பலப்படுத்தவும், கண்காணிப்பை தீவிரப்படுத்தி, மாநிலத்தில் அமைதியை நிலைநிறுத்த வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளன.