காந்தி குடும்பத்தினர் 600 முறைக்கும் மேல் விதிகளை மீறியுள்ளனர்: அமித்ஷா குற்றச்சாட்டு!

சர்வதேசப் பயணங்களின் போது, விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் நேரத்தில், ஹோட்டல்களை புக் செய்து அதில் பிரதமர் மோடி தங்குவதில்லை என்றும், குளிப்பதை கூட விமான நிலையத்திலேயே செய்துகொள்கிறார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சிறப்பு பாதுகாப்புக் குழு சட்ட திருத்த மசோதாவின் மீது, நாடாளுமன்றத்தில் பேசிய அமித்ஷா, முன்பெல்லாம் பிரதமர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளும்போது, விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட தொழில்நுட்ப காரணங்களுக்காக விமானம் நிறுத்தப்படும் போது, பிரதமருக்காக ஹோட்டல்கள் புக் செய்யப்படும். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி இதுவரை ஹோட்டல்களை புக் செய்து தங்கியதில்லை என்றும், அவர் விமானநிலையத்தில் தான் தங்குகிறார், அங்கேயே தான் குளிக்கிறார். எரிபொருள் நிரப்பப்பட்டபின் மற்றவேலைகளை தொடர்கிறார் என்று தெரிவித்துள்ளார். மேலும், வெளிநாட்டுப் பயணங்களின் போது 20 சதவீதத்திற்கு குறைவான பணியாளர்களையே அழைத்துச் செல்வதாக அவர் புகழாரம் தெரிவித்துள்ளார். முன்பு, பணியாளர்களுக்கென்று தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படும். ஆனால், பணியாளர்களுக்கு ஏற்பாடு செய்யும் கார் அல்லது பேருந்து ஒன்றில் 4 அல்லது 5 பேர் செல்லவேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார் என்று தெரிவித்தார். சோனியா காந்தி குடும்பத்தினருக்கு, சிறப்பு பாதுகாப்பு குழு விலக்கிக்கொள்ளப்பட்டது குறித்து பேசிய அமித்ஷா, சிறப்பு பாதுகாப்புப்படையினரால் பாதுகாக்கப்பட்ட 3 பேரும் (சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி) இதுவரை 600க்கும் மேற்பட்ட முறை பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளனர் என்று அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து விரிவாக பதிலளித்துள்ள அவர், 2015ம் ஆண்டு முதல் 1892 முறை இந்தியாவிற்குள்ளும், 247 முறை வெளிநாடுகளுக்கும் சிறப்பு பாதுகாப்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்காமல் ராகுல்காந்தி பயணம் மேற்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அதேபோல, சோனியா காந்தி டெல்லிக்கு 50 முறையும், 13 முறை டெல்லிக்கு வெளியேயும் சிறப்பு பாதுகாப்பு குழுவின் புல்லட் ப்ரூஃப் வாகனங்கள் இன்றி சென்றிருப்பதாகவும், 24 முறை பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்காமல் வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்தியை பொறுத்தவரை 339 முறை டெல்லிக்கும், 64 முறை இந்தியாவின் இதர பகுதிகளுக்கும் சிறப்பு பாதுகாப்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்காமல் சென்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு, 1991ம் ஆண்டு முதல் 99 வெளிநாட்டு பயணங்களை பிரியங்கா காந்தி மேற்கொண்டிருப்பதாகவும், அவற்றில் 78 பயணங்கள் சிறப்பு பாதுகாப்புக்குழுவினரின் பாதுகாப்பு இல்லாமல் சென்றிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். “நீங்கள் பொது வாழ்க்கையில் இறங்குகிறீர்கள் என்றால், நீங்கள் விதிமுறைகளை பின்பற்றியே ஆகவேண்டும்” என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு நீக்கப்பட்டது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகதான் என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமித்ஷா, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நரேந்திர மோடியின் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்றும், சிறப்பு பாதுகாப்பு குழு விலக்கிக்கொள்ளப்பட்டது தொழில்முறை பாதுகாப்புக்குழுவினரின் மதிப்பீட்டின்படியே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். குரல் வாக்கெடுப்பின் மூலம் சிறப்பு பாதுகாப்பு குழு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் காங்கிரஸ், திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. சிறப்பு பாதுகாப்பு குழு சட்ட திருத்த மசோதா 1988ல் எதற்காக உருவாக்கப்பட்டதோ அதே நோக்கத்திற்காகவே அது மீண்டும் திருத்தப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்களை பாதுகாப்பதற்காக தான் சிறப்பு பாதுகாப்புக்குழு உருவாக்கப்பட்டது என்றும், இந்த சட்டமானது, ஒரு குடும்பத்தை மட்டும் மனதில் வைத்து 5 முறை திருத்தப்பட்டது என்று குற்றம்சாட்டிய அமித்ஷா, முதன்முறையாக இந்த பாதுகாப்பு குழு பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு