இளம்பெண் ஒருவர் தனியார் மருத்துவர்களின் கவனக்குறைவால் தவறான ஊசி செலுத்தியதால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு

சென்னையை அடுத்த அனகாபுத்தூர், தண்டலம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் நித்யா. இவர் பட்டப்படிப்பு முடித்து, வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் நித்யாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அருகிலுள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சைக்கு சென்ற போது அங்கிருந்த மருத்துவர் சுஜாதா கருணாகரன், நித்தியாவை பரிசோதித்து பின்னர் ஊசி போட்டதாக கூறப்படுகிறது. ஊசி போட்ட சில நிமிடத்தில் நித்யா கிளினிக்கில் மயங்கி கீழே விழுந்ததாகவும், அங்கிருந்த மருத்துவர் உடனடியாக நித்யாவை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் படி பெற்றோரிடம் தெரிவித்து, தங்கள் மருத்துவ சேவையை நிறைவு செய்துள்ளனர். மருத்துவர்களின் செயலால் அதிர்ச்சி அடைந்த நித்யாவின் பெற்றோர், செய்வதறியாமல் அருகிலுள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அங்கும் சிகிச்சை அளிக்காமல் ஈவு இரக்கமின்றி அவர்களை வெளியேற்றியுள்ளனர். தொடர்ந்து நித்யாவை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு நித்யாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து அரை மணி நேரமாகி விட்டதாக தெரிவித்துள்ளனர். அதை கேட்டு நித்யாவின் பெற்றோர் கதறி அழுதுள்ளனர். பணம் பிடுங்குவதில் மட்டும் கவனமாக செயல்படும் தனியார் மருத்துவர்களின் தொடர் அலட்சியத்தால் தான், தங்களது மகள் இறந்துவிட்டதாக நித்யாவின் பெற்றோர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட போதும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்தனர். குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு போதிய வசதிகள் இல்லாததால் நித்யாவின் உடல் சென்னை ராஜீவ்காந்தி பொது அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.. பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவேண்டும் என்றும் பெற்றோர் வேண்டுகோள் விடுத்ததால், மூன்று நாட்களாக மருத்துவனையில் நித்யாவில் உடல் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மூன்று நாளாகியும் சம்பந்தப்பட்ட மருத்துவர் சுஜாதா கருணாகரன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமுற்ற நித்யாவின் உறவினர்கள் அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். நித்யாவின் இறப்புக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், பிரேத பரிசோதனையை வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கையையும் போலீசார் ஏற்றதால் உறவினர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். நித்யாவின் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே, இறப்புக்கான உண்மை காரணம் தெரியவரும் என்றும், அதன்பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)