அஸ்ஸாம் இஸ்லாமியர்கள்.ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சத்தை தானமாக வழங்கமுடிவுசெய்துள்ளனர்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ரூ.5 லட்சத்தை தானமாக வழங்க அஸ்ஸாமை சேர்ந்த ஜோனோகுஸ்தியா சோமோனோய் பரிஷத் அஸோம் (Jonogusthiya Somonnoy Parishad Asom) என்ற குடையின் கீழ் இயங்கும் இஸ்லாமிய அமைப்பினர் முடிவுசெய்துள்ளனர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வ்ழக்கு சமீபத்தில் நிறைவுக்கு வந்தது. சர்சைக்குரிய நிலத்தை இந்துக்களுக்கே வழங்க முடிவுசெய்த உச்சநீதிமன்றம், அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு என தனியாக 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கவேண்டும் எனவும் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றம் அளித்த இந்த வரலாற்றுத் தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், அதனை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதில் உடன்பாடு இல்லை என டெல்லி ஜம்மா மஸ்ஜித்தின் இமாம் அஹமது புகாரி தெரிவித்தார். இதனை அடுத்து, அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது உத்தரப்பிரதேச அரசு. இந்நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த 21 இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து ராமர் கோயில் கட்டுவதற்காக 5 லட்சம் ரூபாயை தானமாக வழங்குவதாக முடிவெடுத்துள்ளனர். 100 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்த பாபர் மசூதி வழக்கு நிறைவுக்கு வந்தது எனவும் இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவில் தங்கள் பங்களிப்பும் இருக்கவேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்த முடிவை எடுத்ததாக ஜோனோகுஸ்தியா சோமோனோய் பரிஷத் அஸோம் அமைப்பின் தலைவர் சையத் தெரிவித்துள்ளார். அவர், பாஜகவின் மூத்த செய்திதொடர்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.