காஷ்மீர் பிரச்சினைக்கு சுமுகத்தீர்வு காணுமாறு மோடிக்கு இம்ரான்கான் கோரிக்கை.

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கர்தார்பூர் வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ள நிலையில், காஷ்மீர் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காணுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் தர்பார் சாஹிப் குருத்வாராவிற்கு செல்லும் சீக்கியர்களின் வசதிக்காக, பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து சாலை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் இந்தியப் பகுதியை பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பகுதியில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானும் நேற்று திறந்து வைத்தனர். குருதாஸ்பூரில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை திறந்துவைத்த பிரதமர் மோடி, 562 பேர் அடங்கிய முதல் குழுவை கர்தார்பூருக்கு வழியனுப்பிவைத்தார். இந்த குழுவில் இடம்பெற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன், மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர், பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங், முன்னாள் முதலமைச்சர் பாதல் உள்ளிட்டோரை பிரதமர் சந்தித்துப் பேசினார். முன்னதாக வழித்தடத்தை தொடங்கி வைத்துப் பேசிய மோடி, இந்தியாவின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கு மதிப்பளித்தற்காக நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார். புதிய வழித்தடத்தின் மூலம் கர்தார்பூர் குருத்வாராவிற்கு செல்வது எளிதாகியுள்ளதாக மோடி தெரிவித்தார். இதனிடையே, கர்தார்பூரில் ஏராளமான சீக்கியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், எல்லைகளை சுதந்திரமான வர்த்தகத்திற்காக திறப்பதே இருநாடுகளுக்கும் பலன் அளிக்கும் என்றும் குறிப்பிட்டார். காஷ்மீர் விவகாரம் வெறும் பிராந்தியப் பிரச்சனை அல்ல என்றும், மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினை என்று இம்ரான் கான் தெரிவித்தார். காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், நீதி அமைதியைக் கொண்டு வரும் என்றும் அநீதி குழப்பத்தையே ஏற்படுத்தும் என்றார். காஷ்மீர் பிரச்சனையால் 70 ஆண்டுகளாக வெறுப்புணர்வு நீடித்து வருவதாகவும், இரு நாடுகள் இடையிலான உறவு மேம்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் இம்ரான்கான் தெரிவித்தார். கர்தார்பூர் குருத்வாராவிற்கு சென்ற மன்மோகன்சிங் உள்ளிட்டோரை இம்ரான்கான் வரவேற்றார். அப்போது பேசிய மன்மோகன், இந்த வழித்தடம் திறக்கப்பட்டிருப்பது இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்த உதவும் என்றார். குருநானக் ஜெயந்தியின் 550வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, பாகிஸ்தானில் உள்ள நான்கனா சாகிப் குருதுவாரா வண்ண மின் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)