பாகிஸ்தான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!

தீவிரவாத அமைப்புகளின் சொர்க்கபூமியாக பாகிஸ்தான் திகழ்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. கடந்த ஆண்டுக்கான தீவிரவாத பாதிப்பு குறித்த ஆய்வு அறிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான், தனது மண்ணில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளான லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது ஆகியவற்றிற்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுப்பதில், தோல்வி அடைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதோடு, இந்த தீவிரவாத அமைப்புகள் தங்கள் அமைப்புகளுக்கு ஆட்களைத் திரட்டுவதிலும், அவர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, தீவிரவாத அமைப்புகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் உள்ளதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கும் பாகிஸ்தான் அரசு வாய்ப்பளித்து வருவது மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது