கர்ப்பிணிக்கு ஆபரேஷன் செய்ய லஞ்சம் பெண் டாக்டருக்கு 3 ஆண்டுகள் சிறை

கேரளாவில் கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை செய்ய ரூ2,000 லஞ்சம் வாங்கிய அரசு பெண் டாக்டருக்கு 3 ஆண்டு சிறை தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே கடைக்கலில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு, மகளிர் சிறப்பு மருத்துவராக பணி புரிந்தவர் ரினு அனஸ் ராவுத்தர். கடந்த 2011ம் ஆண்டு பணியில் இருந்தார். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று ரினு கூறினார். அதற்கு ரூ2 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டார். இது தொடர்பாக, கொல்லம் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு அந்த பெண்ணின் உறவினர்கள் தகவல் கொடுத்தனர். போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் பெண்ணின் உறவினர்கள் டாக்டருக்கு எ2 ஆயிரம் கொடுக்க முயன்றனர். இதை ரகசியமாக கண்காணித்த போலீசார், ரினுவை அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கு கொல்லம் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், லஞ்சம் வாங்கிய டாக்டருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.