தென்காசி மாவட்டம் இன்று உதயம்

திருநெல்வேலி: தென்காசி புதிய மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று(நவ.,22) துவக்கி வைக்கிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிந்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு 33வது புதிய மாவட்டம் அமைகிறது. தென்காசி, சங்கரன்கோவில் இரு வருவாய் கோட்டங்களுடன், 8 தாலுகாக்களுடன் இம் மாவட்டம் உருவாகிறது. துவக்க விழா காலை 9:30 மணிக்கு தென்காசியில் ஆசாத்நகரை அடுத்துள்ள இசக்கி மகால் வளாகத்தில் நடக்கிறது. துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார். தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்கிறார். முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அமைச்சர்கள் உதயகுமார், ராஜலட்சுமி, திருநெல்வேலி கலெக்டர் ஷில்பா, தென்காசி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், தென்காசி எஸ்,பி., சுகுணாசிங் பங்கேற்கின்றனர்.