2 பெண்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் 250 ரூபாய் தினக்கூலிக்கு விற்பனையாளர் வேலை செய்த 2 அப்பாவிப் பெண்களை அவர்களுக்கே தெரியாமல் புகைப்படம் எடுத்து, மோசடி செய்பவர்கள் என தவறான தகவல் பரப்பிய போலி சமூக ஆர்வலரின் செயலால், அந்த 2 பெண்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் புகைப்படமும் அதற்கு கீழ் ஒரு ஆடியோவும் கடந்த சில வாரங்களாகவே வாட்ஸப் மற்றும் ஃபேஸ்புக்கில் சுற்றி வருகிறது. அந்த ஆடியோவில் பேசும் நபர் “பாண்டி டூ சென்னை” என்ற வாட்ஸப் குழுவின் அட்மின் அக்பர் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். பின்னர் புகைப்படத்தில் உள்ள பெண்கள் இருவரும் வழிப்போக்கர்களிடம் அவசரம் எனக் கூறி செல்போன் வாங்கி, குறிப்பிட்ட எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து, வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடுவதாக ஆடியோவில் குறிப்பிடுகிறார். இந்த புகைப்படமும் ஆடியோவும் ஒரே வாரத்தில் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் என ஏராளமான வாட்சப் குழுக்களிலும் தனிப்பட்ட எண்களுக்கும் பகிரப்பட்டன. இந்த நிலையில், குறிப்பிட்ட புகைப்படத்தில் இருக்கும் மண்ணச்சல்லூரைச் சேர்ந்த அனிதா, மோனிஷா ஆகிய அந்த இருவரும் தங்களை யாரோ ஒருவர் அனுமதியின்றி புகைப்படம் எடுத்து அவதூறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டுள்ளதாகவும் இதனால் தாங்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் எனவே சம்மந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர். அனிதாவும் மோனிஷாவும் தங்கள் குடும்ப பொருளாதார சூழல் காரணமாக ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் பொருட்களை வீடு வீடாகச் சென்று விளம்பரம் செய்து விற்பனை செய்யும் வேலையை செய்து வருகின்றனர். 250 ரூபாய் தினக்கூலிக்கு வேலைக்குச் சென்று வந்த இருவரும் இந்த வாட்சப் அவதூறால் கடந்த ஒரு வாரமாக வெளியில் தலைகாட்ட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். தங்கள் புகைப்படத்தையும் அந்த ஆடியோவையும் மேற்கொண்டு யாரும் பகிர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கும் இருவரும் இனி வரும் காலங்களில் யாரும் இதுபோன்ற செயல்களை செய்ய வேண்டாம் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர். பெண்கள் இருவரைப் பற்றி தவறான செய்தியை பரப்பிய அந்த நபர், உண்மையிலேயே சமூகத்தின் மீது அக்கறை கொண்டவராக இருந்தால், இருவர் குறித்தும் போலீசில் புகாரளித்திருக்கலாம். அதைவிடுத்து கற்பனையாக ஒரு கதையை எழுதி, சமூக வலைதளங்களில் பரவ விட்டது தவறு என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். வாட்ஸப், ஃபேஸ்புக் போன்ற நவீன கால தகவல் தொடர்பு வசதிகள் மனித சமூகத்துக்கு நன்மை அளிக்கவே கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அவற்றை தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தும் ஒரு சிலரால், இதுபோல் பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. எனவே சமூக வலைதளங்கள் வழியாக எந்த ஒரு செய்தி பகிரப்பட்டாலும் அதனை முழுமையாக ஆராய்ந்த பின் பகிர்வது நல்லது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)