திருச்சி விமான நிலையங்களில் ரூ.2.5 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் விடிய விடிய சோதனை மேற்கொண்ட மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், 100க்கும் மேற்பட்டோரிடம் இருந்து 50 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து நேற்றிரவு அங்கு சென்ற 22 பேர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அவர்களது உடைமைகளையும் தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது, உடைமைகள், உள்ளாடைகள், மலக்குடல் ஆகியவற்றில் மறைத்து 100க்கும் மேற்பட்டோர் தங்கம் கடத்தி வந்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களிடம் இருந்து இதுவரை 50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தலில் ஈடுபட்ட பலர், கடத்தல் தொழிலில் ஈடுபடும் குருவிகள் என்றும் சிலர் குருவிகளுக்கு ஏஜெண்டுகளாகச் செயல்படும் கொக்குகள் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரேநாளில் இவ்வளவு கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் கடத்தி வந்தவர்களில் 15 பேரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்றவர்களிடம் விமான நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.