உசிலம்பட்டி அருகே சிலிண்டரை வெடிக்க செய்து தந்தை மற்றும் மகள்கள் தற்கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சிலிண்டரை வெடிக்க செய்து தந்தை மற்றும் மகள்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தாய் கீதா உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் கருப்பையா என்பவர் தனது இரு மகள்களுடன் சிலிண்டரை வெடிக்கச் செய்து நேற்று தற்கொலை செய்துகொண்டார். கருப்பையாவின் மனைவி கீதா, தனது ஆண் நண்பர் ஆனந்துடன் வீட்டை விட்டு வெளியே சென்றதன் காரணமாகவே அவர்கள் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக் கோரி, கருப்பையாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், கருப்பையாவின் மனைவி கீதா, கீதாவின் தந்தை பெரியகருப்பன், சித்தப்பா மலைச்சாமி ஆகிய மூன்று பேரை உசிலம்பட்டி போலிசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கீதாவின் ஆண் நண்பர் ஆனந்த், ஆனந்த்தின் தந்தை கருப்பையா, ஆனந்த்தின் தாய் சொர்ணம், ஆனந்த்தின் சகோதரி அபிராமி ஆகிய 4 பேரை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்கள் நான்கு பேரையும் கைது செய்தால் மட்டுமே, உடல்களை வாங்குவோம் என உறவினர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.