நிதி பற்றாக்குறையால் தள்ளாடும் தாலிக்கு தங்கம் திட்டம்: விண்ணப்பித்து 18 மாதம்

சமூக நலத்துறையின் மூலம் மகளிருக்கான திருமண உதவிதிட்டங்கள், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், திருநங்கைகள் நலனுக்கான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதில் முக்கியமாக மகளிர் மேம்பாட்டிற்காக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப்பெண்கள் திருமண நிதி உதவிதிட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு திருமண உதவிதிட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவிதிட்டம் என ஐந்து வகையான திருமண நிதிஉதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு பணம் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் 2016 மே 23 முதல் எட்டு கிராம் தங்க நாணயம் பணத்துடன் கூடுதலாக வழங்கப்பட்டு வருகின்றது. திருமணநிதி பட்டம், பட்டயபடிப்பு படித்திருந்தால் ₹50,000, மேல்நிலை கல்விக்கு ₹25,000 வழங்கப்பட்டு வருகின்றது.கடந்த தி.மு.க ஆட்சியில் திருமண உதவித்தொகைக்கு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு திருமணம் முடிந்து காலதாமதமின்றி வழங்கப்பட்டு வந்தது. தற்போதைய அதிமுக ஆட்சியில் திருமண உதவித்தொகைக்கு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு திருமணம் முடிந்து சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னரே நிதி வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் திருமண உதவித்தொகை பெறும் பயனாளிகள் குழந்தை பிறந்த பின்னரே அதை பெறும் நிலை உள்ளது. அதற்கு நிதி பற்றாக்குறையே முக்கிய காரணமாக கூறப்படுகின்றது. நிதி உதவியினை காரணம் காட்டி திருமணத்திற்கு பெற்ற கடனை வட்டியுடனே செலுத்த வேண்டிய நிலை உள்ளது. தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றும் சமூகநல அலுவலர்கள் மூலம் சமூகநலத்துறையில் திட்டங்கள் செல்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் மாவட்ட சமூக நலஅலுவலர் பணியிடம் முதல் ஒன்றிய அளவிலான சமூக விரிவாக்க அலுவலர் உள்ளிட்ட பல பணியிடங்ள் காலியாக உள்ளன. அதனால் திட்டங்கள் முறையாக பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் போய் சேருவதில்லை. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், கொரடாச்சேரி, குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய பத்து ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் திருவாரூர், வலங்கைமான், முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் சமூகவிரிவாக்க அலுவலருக்கான (எம்.எஸ்) பணியிடங்கள் காலியாக உள்ளது. அதேபோல் திருவாரூர் மாவட்ட சமூகநல அலுவலருக்கான பணியிடமும் காலியாக உள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பத்து ஒன்றியங்களில் திருமண உதவித்தொகை திட்டத்தில் 18 மாதங்களுக்கு முன் பெறப்பட்ட மனுக்களுக்கு கடந்த 8ம் தேதி அமைச்சர் காமராஜ் தாலிக்கு தங்கம் வழங்கினார். அதில் வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சியை சேர்ந்த 173 பயனாளிகளில் முறையான தகவல் தராததால் வலங்கைமான் பகுதியை சேர்ந்த 32 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்படவில்லை. அதற்கு ஊராட்சி ஒன்றிய அளவிலான சமூகநலத்துறை அலுவலர்கள் பணியிடம் காலியாக இருப்பதே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. திருமண உதவித்தொகை பெற விண்ணப்பித்து நிதி பற்றாக்குறையால் 18 மாதங்கள் காலதாமதம் ஆன நிலையில் சமூகநல அலுவலர்களின் காலிபணியிடத்தாலும் அலுவலர்களின் கூடுதல் பணிச்சுமையாலும் உரிய நேரத்தில் பயனாளிகளுக்கு தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படாமல் தள்ளாடுகிறது. பட்டதாரி பெண்களுக்கு 50,000க்கு பதில் 25,000? தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் பட்டதாரி பெண்களுக்கு 50,000 வழங்க வேண்டிய நிலையில் அவர்களுக்கு தங்க நாணயம் வழங்கிய கவரில் ரூபாய் ஐம்பதாயிரம் என எழுதப்பட்டு பின்னர் அடித்து 25,000 என எழுதப்பட்டுள்ளது. இதற்கான தொகை அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்நிலையில் இவர்களுக்கு வங்கி கணக்கில் 50,000 வரவு வைக்கப்படுமா? அல்லது 25ஆயிரம் வரவு வைக்கப்படுமா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)