கடைசி வாய்ப்பு - நீதிமன்றம். அமைச்சர் வேலுமணி ஊழல் புகார்கள் குறித்த முதல்கட்ட விசாரணையை டிசம்பர் 18 ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு.

மாநகராட்சி டெண்டர் முறைகேடுகளுக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். சென்னை, கோவை மாநகாரட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கோரப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அமைச்சர் வேலுமணி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, நெருங்கியவர்களுக்கு ஒப்பந்தத்தை வழங்கியதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், இதுகுறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி அறப்போர் இயக்கம், திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அமைச்சர் வேலுமணி தரப்பில் இன்று பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாநகராட்சி டெண்டர் முறைகேடுகளுக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். அமைச்சர் என்ற முறையில் கொள்கை முடிவுகளை மட்டுமே எடுப்பதாகவும், மாநகராட்சி டெண்டர் நடைமுறைகளில் தலையிடுவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். டெண்டர்களில் முறைகேடு குற்றச்சாட்டுகளை பொறுத்தவரை, சம்பந்த்ப்பட்ட மாநகராட்சிகள் தான் எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். தான் எம்.எல்.ஏ.வாகும் முன்பே தன் சகோதரர்களின் நிறுவனங்கள், கோவை மாநகராட்சியின் ஒப்பந்ததாரர்களாக இருந்துள்ளதாக விளக்கம் அளித்துள்ள அவர், அந்த நிறுவனங்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார். தமிழக அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, டெண்டர்கள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகளின் தூண்டுதலில், தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, லஞ்ச ஒழிப்பு துறையின் ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், மனுதாரர்களின் புகாருக்கு எந்த ஆதாரங்களும் இல்லை, அரசியல் உள் நோக்கதுடன் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆரம்ப கட்ட விசாரணையை நிறைவு செய்ய இரண்டு மாதங்கள் ஆகும் என வாதிட்டார் தமிழக அரசு தரப்பில் தலைமை அரசு வழக்கறிஞர் ஆஜராகி, ஆரம்ப கட்ட விசாரணை நடைப்பெற்று வருகிறது, ஏராளமான ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டி இருப்பதால், விசாரணை நிறைவு செய்ய சிறிது காலம் எடுக்கும், விசாரணைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். திமுக தரப்பில், ஆரம்ப கட்ட விசாரணை ஒரு ஆண்டாகியும் முடிவடையவில்லை என்றும், தாங்கள் சமர்பித்த ஆதரங்களில் முகாந்திரம் இருப்பதாகவும் வாதிட்டார். அறப்போர் இயக்கம் ஆஜரான வழக்கறிஞர், டெண்டருக்கு விண்ணபிக்க ஒரே ஐபி முகவரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக எந்த விசாரணையும் நடைபெறவில்லை, எனவே மாநில காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்பதால் சிறப்பு புலானாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார். வழக்கறிஞர்களின் இந்த வாதங்கள் தொலைக்காட்சிகளில் வரும் விவாத நிகழ்ச்சிகளை போல இருப்பதாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், அமைச்சருக்கு எதிரான புகார் குறித்த ஆரம்ப கட்ட விசாரணையை டிசம்பர் 18 ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்