திருக்கோவிலுார்: பிறந்து, 17 நாட்களே ஆன, பச்சிளம் பெண் குழந்தையை, உயிருடன் புதைத்த, கொடூர தந்தை

திருக்கோவிலுார்: பிறந்து, 17 நாட்களே ஆன, பச்சிளம் பெண் குழந்தையை, உயிருடன் புதைத்த, கொடூர தந்தை மற்றும் தாத்தாவை, திருக்கோவிலுார் போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த, வடமருதுார் கிராமத்தைச் சேர்ந்தவர், துரைக்கண்ணு, 52. இவரது மகன் வரதராஜன், 29; இவரது மனைவி சந்திரா, 22. இருவருக்கும், 14 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. பிரசவத்திற்காக, தன் தாய் வீடான சுந்தரேசபுரத்திற்கு, சந்திரா சென்றிருந்தார். 20ம் தேதி, புதுச்சேரி அரசு மருத்துவமனையில், அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை பிறந்ததை, துரைக்கண்ணுவும், வரதராஜனும் விரும்பவில்லை. இந்நிலையில், தாய் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த சந்திராவை கட்டாயப்படுத்தி, சில நாட்களுக்கு முன், தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். நேற்று(நவ.,4) நள்ளிரவு, 12:00 மணி அளவில், சந்திரா, தன் குழந்தைக்கு பால் கொடுத்தபின், தொட்டிலில் துாங்க வைத்துள்ளார். அதிகாலை, 4:30 மணி அளவில், கண் விழித்து பார்த்தபோது, தொட்டிலில் குழந்தை இல்லாததைக் கண்டு, திடுக்கிட்டார். உறவினர்கள் அனைவரும், குழந்தையைத் தேடினர். அப்போது, வீட்டின் அருகே, தென்பெண்ணை ஆற்றில், புதிதாக பள்ளம் தோண்டி, மூடப்பட்ட தடயம் இருந்தது. அந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது, குழந்தை புதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து, திருக்கோவிலுார் போலீசார் விசாரணை நடத்தினர். குழந்தையின் உடல், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சந்திரா அளித்த புகாரில், 'பெண் குழந்தை பிறந்தால், கொலை செய்து விடுவதாக, மாமனார் துரைக்கண்ணு மற்றும் கணவர் வரதராஜன் மிரட்டி வந்தனர்' என, தெரிவித்திருந்தார். போலீசார் விசாரணையில், வரதராஜன், தனக்கு பெண் குழந்தை பிறந்தது பிடிக்காமல், அதை உயிருடன் புதைத்ததை ஒப்புக் கொண்டார். போலீசார், அவரை கைது செய்தனர். மேலும், குழந்தையை கொலை செய்ய துாண்டியதாக, துரைக்கண்ணுவும் கைது செய்யப்பட்டார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)