வடசென்னையில் ஒரு முகம்மது அலி...!15 வயதில் குத்துச்சண்டை ஆசிய சாம்பியன்...!

தெருவிளக்கு வெளிச்சத்தில் குத்துச்சண்டை பயிற்சி மேற்கொண்டு, ஆசிய அளவில் நடைபெற்ற போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார் வடசென்னை நாயகன் விஸ்வநாத். ஆசிய நாடுகளுக்கு இடையிலான ஜூனியர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில், வடசென்னை சர்மா நகர் பகுதியை சேர்ந்த 15 வயதான விஸ்வநாத்களம் கண்டு, தனது அபார திறமையை வெளிப்படுத்தி தங்கப்பதக்கம் வென்று சாதனை நிகழ்த்தியுள்ளார். உஸ்பெகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்த வீரர்களை தனது ஆக்ரோஷ குத்துகளால் வீழ்த்தி, தங்கப்பதக்கத்தை கழுத்தில் ஏந்தினார் விஸ்வநாத். வெற்றியை கொண்டாடும் பதக்க மேடையில் இந்திய தேசியக் கொடி பட்டொளி வீசும் போதும், தேசிய கீதம் ஒலிக்கும் போதும் பயிற்சியின் போது தான் அடைந்த வேதனைகள் அனைத்தும் மறந்து கண்ணீர் விட்டதாக கூறுகிறார் சாதனை நாயகன் விஸ்வநாத். மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னணியை சேர்ந்த விஷ்வநாத் ஆரம்பத்தில் தனது தந்தை சுரேஷ் பாபு மூலம் குத்துச்சண்டை உக்திகளை கற்றுள்ளார். தெரு விளக்குகளிலும், மாநகராட்சி மைதானங்களிலும் பயிற்சி மேற்கொண்டு தனது விடா முயற்சியால் தடைக் கற்களை, நாக் அவுட் செய்து சாதனை நாயகனாக உறுவெடுத்துள்ளார் விஸ்வநாத். மாநகராட்சி மைதானங்களில் பயிற்சி மேற்கொள்ளும் போது இவரது திறமையை அடையாளம் கண்ட குத்துச்சண்டை பயிற்சியாளர்களான காமேஷ், லோகச்சந்திரன் ஆகியோர் சர்வதேச சாதனை நாயகனாக உறுவாக்கியுள்ளனர். சிறுவயதில் தன்னுடைய குத்துச்சண்டை கனவு, பொருளாதார வசதியில்லாததால் ஈடேறாமல் போனதாக விஸ்வநாத் தந்தை சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார். ஆனால், அரசு உதவி செய்தால் நிச்சயம் தனது மகன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பான் என நம்பிக்கை அளிக்கிறார். ஒலிம்பிக் போட்டிகளில் ஒற்றை இலக்க பதக்கத்துடன் நாடு திரும்பும் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, தனது பதக்க எண்ணிக்கையை உயர்த்த இதுபோன்ற சாதனை நாயகன்களை அடையாளம் கண்டு ஊக்குவித்தால் மட்டுமே சாத்தியம்.