‘ஃபாஸ்டேக்’ சுங்கக்கட்டணம்; டிச.15 வரை நீட்டித்தது மத்திய அரசு

சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு, கட்டணத்தகராறு போன்றவற்றைத் தவிர்க்க மத்திய அரசு டிச.1 முதல் ஃபாஸ்டேக் எனும் புதிய முறையை அமல்படுத்துவதாக அறிவித்த நிலையில் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் பணமில்லாமல் கட்டணம் செலுத்தும் 'ஃபாஸ்டேக் ' (FASTag) எனும் 'செயலி'முறையை அமல்படுத்துகிறது. பணமில்லா முறையில் செயலியில் 'ஃபாஸ்டேக் ' (FASTag) ஸ்டிக்கர் மூலம் ஒவ்வொரு முறை சுங்கச்சவடியை உங்கள் வாகனம் கடக்கும்போது தானாக சுங்கக்கட்டணம் கழிக்கப்படும். இதற்கு வாகன ஓட்டிகள் செய்யவேண்டியது செயலியை டவுன்லோடு செய்து அதில் வங்கிக்கணக்கை இணைத்து ரீசார்ஜ் செய்யவேண்டியதுதான். உங்களுக்கான பார்கோடு அடங்கிய ஸ்டிக்கரைப் பெற்று உங்கள் வாகனத்தின் முன் பக்கக்கண்ணாடியில் ஒட்டிவிட வேண்டும். இதன் பின்னர் உங்கள் வாகனம் ஒவ்வொருமுறை சுங்கச்சாவடியை கடக்கும்போதும் உங்கள் ஸ்டிக்கரில் அடங்கியுள்ள வாகனத்தின் பதிவெண் மற்ற விபரங்கள் அடங்கிய பார்கோடு சுங்கச்சாவடியில் உள்ள ஆண்டெனாவால் டிகோட் செய்யப்பட்டு, 'ஃபாஸ்டேக் ' (FASTag)கணக்கிலிருந்து கட்டணத் தொகை வரவு வைத்துக்கொள்ளப்படும். இதற்கு ஏற்ப, வாகன ஓட்டிகள், 'ஃபாஸ்டேக் ' (FASTag) அக்கவுண்ட்டை ரீசார்ஜ் செய்ய வேண்டும். தேசிய மின்னணு கட்டண வசூல் (NETC) திட்டத்தின் கீழ், 'ஃபாஸ்டேக் ' (FASTag) வழியாக மட்டுமே இனி சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டிச. 1-க்குப்பிறகு செயலியை பதிவிறக்கம் செய்யாமல் 'ஃபாஸ்டேக் ' (FASTag) ஸ்டிக்கர் இல்லாமல் சுங்கச் சாவடியை கடக்கும் வாகன ஓட்டிகள் ரொக்கம், அல்லது டெபிட்,கிரெடிட் கார்டு மூலமாக பணம் செலுத்துவதாக இருந்தால், கட்டண தொகை இரட்டிப்பாக வசூலிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. டிசம்பர் 1 முதல் இது அமுலாவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாடெங்கும் இதற்கான வழிமுறைக்கு வாகன ஓட்டிகள் மாறுவதற்கு பல சிரமங்கள் இருந்தன. ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை வாங்க முடியவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது. நாளை ஒருநாள் மட்டுமே இடையில் உள்ள நிலையில் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து துறைக்கு பல புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இதையடுத்து மத்திய அரசின் சாலைப்போக்குவரத்து நிறுவனம் மேலும் கூடுதலாக நாட்களை நீட்டித்துள்ளது. கால அவகாசத்தை மேலும் 15 நாட்கள் நீட்டித்து டிச.15 வரை ஒத்திவைத்துள்ளது.