ஓசூரில் 10 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட தனியார் பள்ளி தாளாளர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 10 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக சாந்திநிகேதன் பள்ளி தாளாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் ஞாயிறுதோறும் நடைபெறும் தமிழ் கையெழுத்து பயிற்சி வகுப்புக்கு தனது 10 வயது மகளை அழைத்து வந்த தந்தை ஒருவர், அவரை வகுப்பில் அமரவைத்துவிட்டு அருகில் நடந்த ஜோதிட வகுப்புக்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அவரது மகள் ஓடிவந்து, தாளாளர் குருதத் தன்னை அறைக்குள் அழைத்து தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கூறி அழுதுள்ளார். அதுகுறித்து கேட்கச் சென்ற சிறுமியினுடைய தந்தையின் கால்களில் விழுந்த தாளாளர் குருதத், தன்னை மன்னித்துவிடுமாறு கூறி கெஞ்சியதாகக் கூறப்படுகிறது. இதற்குள் அங்கிருந்த சிலர் குழந்தைகள் நல வாரியத்துக்குத் தகவல் கொடுக்கவே, தாளாளர் குருதத் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.