தூங்க ஆசையா உங்களுக்கு... ரூ.1 லட்சத்தில் வேலை 'ரெடி

பெங்களூரு : கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த நிறுவனம், துாக்கத்தை பற்றிய தங்கள் ஆராய்ச்சிக்காக, 100 நாட்களுக்கு, தினமும், ஒன்பது மணி நேரம் துாங்க தயாராக இருப்பவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் சம்பளம் தர உள்ளதாக அறிவித்துள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த 'வேக்பிட் இனொவேஷன்ஸ்' என்ற புதிய நிறுவனம், துாக்கத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இவர்கள் புதிதாக செய்ய உள்ள ஆராய்ச்சிக்காக, துாக்கத்தின் மீது, தீராத காதல் கொண்டவர்களை தேடிக் கொண்டிருக்கிறது. இது குறித்து, அந்நிறுவனத்தின் இயக்குனரும், நிறுவனர்களில் ஒருவருமான, சைதன்யா ராமலிங்க கவுடா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:வாழ்க்கை மற்றும் வேலை, இரண்டையும் சரியான விகிதத்தில் நிர்வகிப்பதன் மூலம், நம் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளோம். இதற்காக, ஆழ்ந்து உறங்க கூடிய, துாக்கத்தின் மீது விருப்பம் கொண்டவர்கள், நிறைய பேர் தேவைபடுகின்றனர். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு, எங்கள் நிறுவனம் சார்பில், படுக்கை ஒன்று அளிக்கப்படும். அவர்கள், வழக்கம் போல தங்கள் அலுவலக வேலைகளை செய்யலாம். தினமும் இரவில், நாங்கள் கொடுத்த படுக்கையில் படுத்து உறங்க வேண்டும். குறைந்தபட்சம், ஒன்பது மணி நேரமாவது உறங்க வேண்டும். இரவு படுக்க போகும் போது, 'பைஜாமா' உடையை மட்டுமே அணிய வேண்டும்.இப்படி, 100 நாட்களுக்கு உறங்க வேண்டும்.