புதுக்கோட்டை வருவாய் அலுவலர் கைது

மதுரை அருகே கருப்பாயூரணியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் ஆர்.ஐ-யாக இருந்து வந்தார். சமீபத்தில் புதுக்கோட்டையில் காலியாக இருந்த துணை தாசில்தார் பணியிடங்களுக்கு வருவாய் ஆய்வாளர்களை நியமிக்கக் கோரி வருவாய் ஆய்வாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில்தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் 38 பேருக்கு பதவி உயர்வு அளித்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டார். பதவி உயர்வு குறித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்குப் பிறகு, சில ஆர்.ஐ-க்களிடம் வரவேற்பும் சிலரிடம் எதிர்ப்பும் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆர்.ஐ-க்களுக்கான ஒரு வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொருவரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில்தான் கந்தர்வக்கோட்டை ஆர்.ஐ சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியரைத் தரக்குறைவாகப் பேசி அவதூறு செய்யும் வகையில் அந்தக் குழுவில் பதிவு ஒன்றை வெளியிட்டு அதற்கு அதிகாரிகளிடமிருந்து பதிலையும் கேட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் குறித்து அவதூறு பரப்பியதாக துணை தாசில்தார் கவியரசன் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுதேவன், சுப்பிரமணியன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், மாவட்ட வருவாய் அலுவலர், ஆர்.ஐ சுப்பிரமணியனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரைத் தரக்குறைவாகப் பேசி வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பிய சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியரை அவதூறு பரப்பியவருக்கு எதிராகப் பலரும் கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர்.