கலெக்டர் விஜய கார்த்திகேயன் அறிவுறுத்தல் உணவு பாதுகாப்புத் துறையினர் தீவிரமாக கண்காணித்து, உரிமம் வழங்கும் இலக்கை எட்ட வேண்டுமென,

திருப்பூர்:உணவு பாதுகாப்புத் துறையினர் தீவிரமாக கண்காணித்து, உரிமம் வழங்கும் இலக்கை எட்ட வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.உணவு பாதுகாப்புத்துறை செயல்பாடுகளை கண்காணிக்க, கலெக்டர் தலைமையிலான வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. மூன்று மாதத்துக்கு ஒருமுறை கூடி, தேவையான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. அதன்படி, வழிகாட்டுதல் குழு கூட்டம், கலெக்டர் விஜய கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை, மாவட்ட அளவிலான, உணவு பாதுகாப்பு நடவடிக்கைகளை விவரித்தார். பான்மசாலா, குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க, தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இதுவரை, 10 ஆயிரத்து, 590 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, 34 உணவு மாதிரி பரிசோதித்து, நான்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது; மொத்தம், 1.20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சியில், ஏழு வீடுகளில் ஆய்வு நடத்தியதில், 500 கிலோ செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கலப்பட நெய் பறிமுதல் செய்யப்பட்டது. மாம்பழ சீசனில் நடத்திய ஆய்வில், 'கார்பைடு' கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட, 1,925 கிலோ மாம்பழம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.மாவட்டம் முழுவதும், உணவு பாதுகாப்பு தினவிழா கொண்டாடி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மொத்தம் 11 பள்ளிகளில், உணவு பாதுகாப்பு விதிமுறைகளை விளக்கி, கண்காட்சி நடத்தப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில், 54 குடிநீர் நிறுவனங்கள் உள்ளன; அவற்றில், வாரம் ஒருமுறை ஆய்வு நடத்தி, தரச்சான்று அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விளக்கினர்.கலெக்டர் பேசுகையில், ''உணவு பாதுகாப்புத்துறையால், 17 ஆயிரத்து 636 உணவு வணிக நிறுவனங்களுக்கு, உணவு பாதுகாப்பு நிறுவன பதிவு மற்றும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறையினர் தீவிரமாக கண்காணித்து, 100 சதவீதம், பதிவு மற்றும் உரிமம் வழங்கும் இலக்கை எட்ட வேண்டும்,'' என்றார். விழிப்புணர்வு இல்லை உணவு பாதுகாப்பு பதிவு குறித்து, மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை; வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட வழிகாட்டுதல் குழு கூட்டத்தை, அனைத்து வியாபாரிகள் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகளை அழைத்து, வெளிப்படையாக நடத்தி, தகுந்த ஆலோசனைகள் வழங்க, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்பது, மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்