கலெக்டரையும் குப்பை அள்ள வைத்த வருவாய் நிர்வாக ஆணையர்

நாகப்பட்டினம் : நாகையில், குப்பை அகற்றும் பணியில், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் களமிறங்கியதால், உடனிருந்த கலெக்டர் மற்றும் அதிகாரிகளும் துாய்மை பணியில் ஈடுபட்டனர். நாகையில், வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல் தடுப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், இரு தினங்களுக்கு முன் ஆய்வு மேற்கொண்டார். நாகை அடுத்த, கீச்சாங்குப்பம் பகுதியில் ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன், ஒரு வீட்டின் வாசலில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில், கொசுக்கள் முட்டையிட்டுள்ளதை பார்த்து, அதை கரண்டியில் எடுத்து, வீட்டின் உரிமையாளரிடம் விளக்கினார். இதை தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த, பாழடைந்த கட்டடங்களில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். கடற்கரையோரம், குடியிருப்பு பகுதியில், பரவலாக தேங்கிக் கிடந்த குப்பையை பார்த்து அதிர்ச்சியடைந்தவர், அங்கிருந்த துப்புரவு பணியாளர்களிடம், மண்வெட்டியை வாங்கி, குப்பையை அள்ளத் துவங்கினார்.இதையடுத்து, உடனிருந்த, கலெக்டர் பிரவின் நாயர், அதிகாரிகள் மற்றும் துப்புரவு ஊழியர்கள், துாய்மை பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி மக்களும், சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர். கீச்சாங்குப்பத்தில் ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன், பாழடைந்து காணப்பட்ட, சிறிய கட்டடத்திற்குள், புதர் மண்டிக்கிடந்ததை பார்த்து, திடீரென்று உள்ளே புகுந்தார். பின், புதர்களை உடனே அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.வருவாய் நிர்வாக ஆணையரின் அதிரடி ஆய்வுக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. மேலும், துாய்மை பணியில் அக்கறை காட்டுவதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்