சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் 55 கிலோ மீட்டர் தூர வழி நெடுகிலும் ஜின் பிங்கிற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தமிழகத்திற்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரை வரவேற்க மிக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜி ஜின் பிங் நாளை சென்னை வருகிறார். நாளை மதியம் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தனி விமானத்தில் வந்து இறங்கும் ஜி ஜின் பிங்கை பிரதமர் மோடி வரவேற்கிறார். விமான நிலையத்தில் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், உள்ளிட்ட தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரவேற்புக்கு பின் ஜி ஜின் பிங், கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்கு செல்கிறார். விமான நிலையத்தில் இருந்து அந்த ஓட்டலுக்கு செல்லும் 5 கிலோ மீட்டர் தூர சாலையின் இரு மருங்கிலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த 6 ஆயிரத்து 800 பேரை கொண்டு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம், கத்திப்பாரா மற்றும் ஓட்டல் முகப்பு ஆகிய மூன்று இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. மேலும் வழி நெடுவிலும் செண்டை மேளம், கோவை டிரம்ஸ், நாதஸ்வரம் உள்ளிட்ட இசைக்கருவிகள் கொண்டு இசை நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், கிண்டி நட்சத்திர விடுதியின் முகப்பில் வாழை மற்றும் கரும்புகளால் ஆன பிரம்மாண்ட வரவேற்பு வளைவு அமைக்கப்படவுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய இசையான நாதஸ்வர இசையுடனும் சீன அதிபரை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த ஓட்டலில் தங்கும் ஜின் பிங், நாளை மாலையில் மாமல்லபுரம் புறப்படுகிறார். சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் 55 கிலோ மீட்டர் தூர வழி நெடுகிலும் ஜின் பிங்கிற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் மாணவ மாணவிகள், மகளிர் சுய உதவி குழுவினர் உட்பட 55 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இதை போல் வழிநெடுக வரவேற்பு வளைவுகள், பேனர்கள் வைத்து சீன அதிபரை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாமல்லபுரம் நுழைவு வாயிலில் பனை ஓலையால் அலங்கரிக்கப்பட்ட வளைவுகள் அமைக்கப்படுகின்றன. அர்ஜூனன்தபசு பகுதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வளைவும், ஐந்துரத சாலையில் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட வளைவுகளும், கடற்கரை கோவில் நுழைவு வாயிலில் மலர்களால் அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கத்தில் கலைக் குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் கலைஞர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டனர். இதே போல தலைவர்கள் இருவரையும் வரவேற்க பள்ளி மாணவ, மாணவியரும் தயாராகி வருகின்றனர். அவர்களுக்காக மாமல்லபுரத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மாமல்லபுரத்தில் நாளை இரவிலும் ஜின்பிங்கிற்காக சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தின் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளும், தமிழகத்தின் சிலம்பாட்டம் உள்ளிட்ட தற்காப்பு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)