திருக்கோயில் கந்தசஷ்டி விழாவில் பங்கேற்க வந்த பக்தர்கள் தங்கும் அறை இல்லாமல் தவித்து வருகின்றனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி விழாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு கோவிலில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உள்பிரகாரங்களில் பந்தல்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பம் பெற்று, விரதம் இருப்பவர்களுக்கு அடையாள அட்டையுடன் தங்கும் வசதி செய்து கொடுக்கப்படுகிறது. இது தவிர வெளிபிரகாரங்கள் மற்றும் கோவிலை சுற்றி பக்தர்கள் தங்குவதற்கு தற்காலிக கொட்டைகள் அமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 8 ஆயிரம் பேர் தங்கும் அளவிற்கு கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கந்தசஷ்டி துவங்கிய நாள் முதல் இன்று வரை பெய்து வரும் தொடர் கனமழையால் தற்காலிக கொட்டகைகளில் கை குழந்தைகள், சிறு குழந்தைகள் உடன் தங்கி விரதம் இருக்கும் பக்தர்கள் அவதியடைந்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமிகோவிலில் 401 தங்கும் அறைகள் உள்ளன. இதில் 308 அறைகள் பழுது காரணமாகவும், பாதுகாப்பு இல்லாத காரணத்தினாலும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த அறைகள் குலுக்கல் முறையில் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது 401 அறைகளில் 93 அறைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப்நந்தூரியிடம் கேட்ட போது, மழையால் பாதிப்படையாமல் இருக்கும் வகையில் பக்தர்களுக்கு உடனுக்குடன் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டு கந்தசஷ்டி விழாவிற்கு முன் தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்த யாத்ரி நிவாஸ் விடுதி கட்டி முடிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.