தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி ஒரு வாரம் ஆகும் நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி ஒரு வாரம் ஆகும் நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதன்பின் மழையளவு பெருமளவு குறைந்துள்ளது. இந்நிலையில் இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை குமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின் ஆழ்ந்த மண்டலமாகவும் அதாவது புயல் சின்னமாகவும் மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், வேலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் பாதுகாப்பு வளைவுகளை தாண்டி வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த பல்கலை., தேர்வுகள் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் சங்கரன் கோயிலில் 14 செ.மீ., மழை பெய்துள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. தொடர் மழை காரணமாக பாதுகாப்பு கருதி கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன.