இரு சக்கர வாகனத்தை நூதன முறையில் திருடிச் சென்ற இந்த இளைஞரை பாதிக்கப்பட்டவர்களே கண்டுபிடித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் பஜார் சாலையில் ஜான் என்பவர் கிரேஸ் பைக்ஸ் என்ற பெயரில் பழைய இரு சக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 16ஆம் தேதி ஜானின் தம்பி எட்வின் என்பவர் கடையில் இருந்துள்ளார். அப்போது ஆட்டோவில் கடைக்கு வந்த இரண்டு பேர் பழைய இரு சக்கர வாகனத்தை விலைக்கு வாங்க வேண்டும் எனக் கூறி ஒவ்வொன்றையும் ஆர்வத்துடன் பார்த்துள்ளனர். பழைய இருசக்கர வாகனத்தின் விலையைக் கேட்க, எட்வின் 72 ஆயிரம் ரூபாய் எனக் கூறியுள்ளார். முடிவில் 70 ஆயிரம் ரூபாய்க்கு பேரம் படிந்த நிலையில் அந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டிப் பார்த்துவிட்டு வாங்கிக் கொள்வதாகக் கூறிய இளைஞர் ஒருவர், உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் ஆட்டோ ஓட்டுநர் இந்த இடத்திலேயே நிற்பார் என்று கூற, அதனை நம்பிய எட்வினும் இரு சக்கர வாகனத்தை கொடுத்துள்ளார். ஆனால் அதனை ஓட்டிச் சென்ற அந்த இளைஞர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த எட்வின், உங்களுடன் வந்து இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற இளைஞர் யார் என்று கேட்டுள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுநரோ அந்த இளைஞர் யார் என்றே தனக்கு தெரியாது என்றும், தனது ஆட்டோவில் அவர் சவாரி மட்டுமே வந்ததாகவும் கூற எட்வின் அதிர்ச்சியில் உறைந்தார். இப்படி நூதன முறையில் இரு சக்கர வாகனத்தை இளைஞர் திருடிச் செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகி உள்ளன. அதிர்ச்சியடைந்த எட்வின் தனது சகோதரரும் பைக் விற்பனை கடையின் உரிமையாளருமான ஜானிடம் கூற பிறகு இருவருமே மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தொடர்ந்து இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞரைத் தேடிக் களத்தில் குதித்தனர். பைக்கை திருடிச் சென்றது சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த நிரோசன் ரோஷன் பிரபு என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரின் விலாசம் மற்றும் சிசிடிவி காட்சிகள் என அனைத்து ஆதாரங்களையும் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளனர். ஆனால் புகாரை பதிவு செய்யாத காவல் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் தங்களை அலைக்கழிப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். ஆட்டோ ஓட்டுநரை அடமானம் வைத்துவிட்டு இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை நூதன முறையில் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிய ஆதாரங்களைக் கொடுத்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கூறுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)