சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் :- போலீஸ்காரர் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது

திருச்செந்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த போலீஸ்காரர் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியும், அதே ஊரைச் சேர்ந்த வாலிபரும் காதலித்து வந்தனர். சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் குரும்பூர் அருகே உள்ள மேல புதுக்குடி கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். இதனை அறிந்த அதே ஊரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் பாலமுருகன் மறைந்து இருந்து தனது செல்போனில் காதல் ஜோடியை புகைப்படம் எடுத்து கொண்டார்.  பின்னர் அவர், அந்த புகைப்படத்தை திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் தன்னுடைய நண்பரான சசிகுமாரின் செல்போனுக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து பாலமுருகனும், சசிகுமாரும் சேர்ந்து காதல் ஜோடியை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டனர். அதன்படி போலீஸ்காரர் சசிகுமார் மேல புதுக்குடி கோவிலுக்கு சென்று, அங்கு வந்த காதல் ஜோடியை வழிமறித்து, ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டினார். பின்னர் சசிகுமார், அந்த சிறுமியை பிடித்து வைத்துக்கொண்டு, காதலனை மட்டும் அனுப்பி வைத்து பணம் எடுத்து வருமாறு கூறினார். இதையடுத்து காதலன் பணத்தை எடுத்து வரச் சென்றார்.  அப்போது சசிகுமார், அந்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் காதலன் வந்ததும், அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரத்தை பெற்றுக்கொண்ட சசிகுமார் தனது செல்போனில் காதல் ஜோடியை புகைப்படம் எடுத்துக்கொண்டு, அவர்களை அனுப்பி வைத்தார். பின்னர் பாலமுருகனும் தனது செல்போனில் உள்ள புகைப்படத்தை காண்பித்து, அந்த சிறுமியிடம் பணம் கேட்டு மிரட்டினார். இதுகுறித்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி நேற்று புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ்காரர் சசிகுமார், பாலமுருகன் ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்