கர்தார்பூர்: இந்தியா-பாக்., ஒப்பந்தம் கையெழுத்தானது

புதுடில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கர்தார்பூர் வழித்தடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கர்தார்பூரில், சீக்கியர்களின் பழமையான குருத்வாரா உள்ளது. சீக்கிய குருவான, குரு நானக்கின் நினைவிடமும் இங்கு உள்ளது. நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து, ஏராளமான சீக்கியர்கள், கர்தார்பூருக்கு வழிபாட்டுக்காக செல்வது வழக்கம். இதையடுத்து, பக்தர்கள் செல்வதற்கு வசதியாக, பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூரிலிருந்து, பாகிஸ்தானின் கர்தார்பூருக்கு, சாலை அமைக்க, இரு நாடுகளும் முடிவு செய்தன. நீண்ட இழுபறிக்கு பின், இந்த பணிகள், சமீபத்தில் முடிவடைந்தன. இந்நிலையில், இந்த கர்தார்பூர் வழித்தடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை சர்வதேச எல்லைப் பகுதியில் நடைபெற்றது. இந்தியத் தரப்பில் மத்திய உள்துறை இணைச் செயலாளர் தாஸ் தலைமையிலான உயர்நிலைக் குழுவும், பாகிஸ்தான் தரப்பில் அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் தலைமையிலான உயர்நிலைக் குழுவும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றன. இதன் தொடர்ச்சியாக, கர்தார்பூர் வழித்தடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தானது. இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்னை, பயங்கரவாதம் உள்ளிட்ட விவகாரங்களால் பகை இருந்து வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனாலும், இந்த சாலை வழியாக, இந்தியாவிருந்து வரும் சீக்கிய பக்தர்களிடம், தலா, 1,400 ரூபாய் கட்டணம் வசூலிக்கப் போவதாக, பாக்., அரசு திடீரென அறிவித்தது. இதற்கு, மத்திய அரசும், சீக்கிய பக்தர்களும், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், பாக்., தரப்பில் அந்த முடிவை திரும்ப பெறவில்லை.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு