தமிழகத்தில் பல இடங்களில் அரசு ஆபீசில் ரெய்டு; லட்சக்கணக்கில் பணம் சிக்கியது

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள சார்-பதிவாளர், ஆர்டிஓ, டாஸ்மாக் மற்றும் அரசு அலுவலகங்களில் தொழில் நிறுவனங்கள் மற்றும் புரோக்கர்கள் சார்பில் பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு பொது அலுவலக வளாகத்தில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அலுவலகத்தில் இருந்த புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சார் பதிவாளர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. அப்போது 2 புரோக்கர்களிடமிருந்த கணக்கில் வராத ₹95 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பெரம்பலூர் இதே போல் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் மற்றும் டாஸ்மாக் குடோனில் சோதனை நடந்தது. இதில், கணக்கில் வராத ₹55 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை 6 மணிக்கு திடீர் சோதனை நடத்தினர். அப்போது, சார்-பதிவாளர் ஆனந்தராஜன் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். ஊட்டி ஊட்டி ரோஜா பூங்கா வளாகத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பணியில் இருந்த வேளாண் அலுவலர் சுப்ரமணி, உதவி கோட்ட பொறியாளர் சிவக்குமார் ஆகியோரிடம் சோதனை மேற்கொண்டதில், அவர்களிடம் கணக்கில் வராத ரூ.67 ஆயிரத்து 803 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. சத்தியமங்கலம் இதுபோல் சத்தியமங்கலம் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் மின் வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ், ஊழியர் சரவணன் ஆகியோர் லஞ்சமாக வாங்கிய ரூ.89 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை பொள்ளாச்சியை சேர்ந்தவர் மோகன்பாபு (42). இவர், கோவை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவர், ஊராட்சி அதிகாரிகள் மற்றும் ஊராட்சி பணிகளை எடுத்து செய்யும் ஒப்பந்ததாரர்களிடம் அதிரடி பண வசூலில் ஈடுபட்டு வருவதாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இவரை போலீசார் கண்காணித்தனர். நேற்று இரவு ஊராட்சி செயலாளர் மற்றும் கான்ட்ராக்டர் ஒருவரிடம் தீபாவளி பணம் வசூலித்து திரும்புவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு 10.30 மணிக்கு அவரை ஜீப்புடன் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். ஜீப்பின் சீட்டுக்கு அடியில் அவர் பதுக்கிய ரூ.45 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து பி.டி.ஓ. மோகன்பாபு மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்று கோவையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுகிறார். திருவண்ணாமலை இதேபோல் திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ₹58 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக நல அலுவலர், ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு