இரவு நேர மின்சார ரெயில்களில் பாதுகாப்பு இல்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் உள்ள மக்களுக்கு பிரதான போக்குவரத்தாக மின்சார ரெயில் திகழ்கிறது. செங்கல்பட்டு, அரக்கோணம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இருந்து எழும்பூர், சென்டிரல், உள்ளிட்ட பகுதிகளுக்கு வருவதற்கு மின்சார ரெயிலை பயன்படுத்துகின்றனர். கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் அன்றாட பயணத்துக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் மின்சார ரெயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் மின்சார ரெயில்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் இரவு நேரங்களில் மிக குறைந்த கூட்டமே காணப்படும். இதனால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் தங்கள் கைவரிசையை மின்சார ரெயில்களில் பயணிப்போரிடம் காட்டி வருகின்றனர். சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக இரவு நேரங்களில் செல்லும் ரெயில்களில் பல்வேறு வழிப்பறி சம்பவம், செல்போன் பறிப்பு உள்ளிட்டவைகள் நடைபெறுவதாக பயணிகள் புகார் கூறுகின்றனர். மின்சார ரெயில்களில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் போலீசார் இருக்கவேண்டும். ஆனால் கடற்கரை-அரக்கோணம் மார்க்கத்தில் செல்லும் இரவு நேர ரெயில்களில் போலீசார் இருப்பதில்லை எனவும், அந்த மார்க்கத்தில் உள்ள ராயபுரம், வியாசர்பாடி ஜீவா போன்ற சிறிய ரெயில் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் இருப்பதில்லை என மின்சார ரெயில் பயணிகள் தெரிவித்தனர். இதனால் இரவு நேரங்களில் மின்சார ரெயில்களில் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது. இதுகுறித்து பயணி ஒருவர் கூறியதாவது:- நான் எனது வேலையை முடித்துக்கொண்டு அரக்கோணத்துக்கு நள்ளிரவில் மின்சார ரெயிலில் செல்வேன். வியாசர்பாடி, ராயபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் சில சமூக விரோதிகள் ரெயிலில் ஏறி அதில் பயணிப்பவர்களிடம் செல்போன் மற்றும் பணப்பறிப்பில் ஈடுபடுகின்றனர். ஏதாவது பெரிய அசம்பாவிதம் நடந்த சில நாட்களுக்கு மட்டும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பின்னர் மீண்டும் பழைய நிலைமைக்கே வந்து விடுகிறது. இதனால் நாங்கள் பாதுகாப்பாக வீட்டுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தினந்தோறும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க ரெயில் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்