சுர்ஜித் அஞ்சலியில் கதறி அழுத பொதுமக்கள்

கடந்த 25-ம்தேதி மாலை 5.30 மணியளவில் திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் பிரிட்டோ மற்றும் கலா மேரி தம்பதியின் இளைய மகன் சுர்ஜித் வில்சன் வீட்டின் அருகேயுள்ள பயன்படுத்தாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான்.அவனை உயிரோடு மீட்பதற்காகக் கடந்த 5 நாள்களாக தீயணைப்புப் படையினர், வருவாய்த் துறையினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் மற்றும் தேசிய மீட்புப் படையினர் பிரத்யேக இயந்திரங்கள் கொண்டு முயற்சி எடுத்தனர். மீட்புப் பணி இன்று அதிகாலை 2 மணி வரை தொடர்ந்தது. சுர்ஜித் வில்சனுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் ஆங்காங்கே பிரார்த்தனைகள் வழிபாடுகள் நடத்தினர். இந்த நிலையில், இரவு 10.30 மணியளவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், அவர் உயிர் இழந்துவிட்டதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்தார். ஆனாலும், தொடர்ந்து மீட்புப் படையினர், மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இப்படியிருக்க, ஒருபுறம் ரிக் இயந்திரத்தின் மூலம் குழி தோண்டும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், நள்ளிரவு 2.30 மணியளவில் சிறுவன் விழுந்த ஆழ்துளைக் கிணறு அருகே போலீஸ் குவிக்கப்பட்டது. அடுத்து ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் வில்சனின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதன்மூலம் சுமார் 84 மணிநேர மீட்புப் போராட்டம் தோல்வியில் முடிவடைந்தது. சுர்ஜித் உடலை மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் பெற்றோரிடம் உடலை ஒப்படைத்தனர். சுர்ஜித்தின் உடல் ஆம்புலன்ஸில் அவரது சொந்த ஊரான நடுக்காட்டுப்பட்டியில் உள்ள பாத்திமாபுரம் கல்லறைத் தோட்டத்துக்குக் கொண்டுவரப்பட்டது. சவப்பெட்டியில் மூடப்பட்ட அவரது உடலுக்கு அமைச்சர்கள் விஜயபாஸ்கர் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக குழந்தையின் உடல் கல்லறையில் வைக்கப்பட்டது. குழந்தை சுர்ஜித்தின் உடல்வைக்கப்பட்ட இடத்தின் அருகே அமர்ந்திருந்த தாய் கலா மேரி,``உன்னை கட்டியணைத்து அழக்கூட நாதியில்லாமல் போச்சுடா..'' என கதறியழுதது நெஞ்சை உறைய வைத்தது. 25-ம் தேதி மாலை 5.30 மணியளவில் சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்ததால் நடுக்காட்டுப்பட்டி மட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள மொத்த கிராமங்களும் சோகத்தில் மூழ்கினர். அப்பகுதி மக்கள் தீபாவளி பண்டிகையைப் புறக்கணித்தனர். குறிப்பாக மணப்பாறை மட்டுமல்லாமல் மணப்பாறையைச் சுற்றியுள்ள ஒத்தக்கடை, புறத்தாக்குடி, வேங்கைகுறிச்சி, ரெட்டியபட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தீபாவளியைப் புறக்கணித்தனர். `ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை நல்லபடியாக மீட்கப்பட்டால், அதுவே போதும்' எனக் கூறி அவ்வப்போது மீட்புப் பணி நடக்கும் இடத்துக்கு வந்து பார்த்து வந்தனர். இந்த நிலையில், குழந்தை சுர்ஜித் வில்சன் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்து திரண்டு வந்த பொதுமக்கள், சாலை எங்கும் கூடி நின்றபடி பொதுமக்கள் கண்ணீருடன் குழந்தையை வழியனுப்பி வைத்தனர். கதறி அழுத பொதுமக்கள், ``கடவுளே உனக்கு இரக்கம் இல்லையா. அவன் முகத்தை உயிரோடு பார்ப்பதற்காக இவ்வளவு போராட்டம். எவ்வளவு பிரார்த்தனை? இறந்துபோன செய்தி கேட்கவா இவ்வளவு பாடுபட்டார்கள்? கடவுளே உனக்கு இரக்கம் இல்லையா?” என கதறி அழுதனர்.சுர்ஜித் வில்சனின் மரணச்செய்தி அப்பகுதியில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்