கலையால் மீண்டும் சாதிக்க துடிக்கும் சகோதரர்கள்

அவிநாசி, மடத்துப்பாளையம் ரோட்டில் உள்ள மர வேலைப்பாடு பட்டறை. பி.இ., பயோ மெடிக்கல், எம்.பி.ஏ., முடித்த விக்னேசும், பி.இ., மோட்டார் மெக்கானிக் முடித்த அஜித்குமாரும் அங்கு மர வேலைப்பாட்டில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தனர். தந்தை தங்கவேல் மேற்கொண்ட மர வேலைப்பாடு பட்டறை தொழிலையே இவர்கள் தேர்வு செய்தது, பலருக்கும் ஆச்சர்யத்தை தரலாம். ஆனால், 'தொழில் பழசு; சிந்தனை புதுசு' என்ற அடிப்படையில், அவர்களது யுத்தி இருக்கிறது.விக்னேஷின் தன்னம்பிக்கை பேட்டி:தொழிலை, தற்போதைய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மேம்படுத்த வேண்டும் என நினைத்தோம். ஓராண்டாக முயற்சி செய்து, தச்சு வேலையை கற்றுக்கொண்டோம். கதவு, ஜன்னல் உட்பட மர வேலைப்பாட்டில், சில நுணுக்கமான கலைநயத்தை புகுத்தி, சந்தைப்படுத்துவது அவசியம்; அத்தகைய வேலைபாடு நிறைந்த பொருட்களை தான், மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.விலையுயர்ந்த மரத்தில் தயாரிக்கப்பட்ட, பர்னிச்சர் பொருட்கள், தங்கள் வீடுகளில் இருப்பதை, மக்கள் கவுரவமாக கருதுவதால், நுகர்வு கலாசாரத்தில், மர வேலைப்பாடுகளுக்கான மவுசு, அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும்.'பைரோகிராபி' என்ற தொழில்நுட்பம், மேலை நாடுகளில் பிரபலம். மரத்தில், எழுத்துகளை உருவாக்கும் தொழில்நுட்பம் அது. இந்த உபகரணத்தை, தம்பி அஜித்குமார் உருவாக்கியுள்ளார். எழுத்து மட்டுமல்லாமல், பறவை, விலங்கினம் உட்பட அனைத்தையும், மரத்தில் ஓவியமாக வரைந்து, வர்ணம் தீட்ட முடியும். இது, பார்க்க மிக அழகாக, நேர்த்தியாக இருக்கும். இத்தகைய வேலைபாடு நிறைந்த மர அலங்காரப் பொருட்களை தயாரித்து, சந்தைப்படுத்த வெள்ளோட்ட அடிப்படையில், முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.பட்டறையில் வீணாகும், மரத்துண்டு மற்றும் மரத்துாள் மூலம், வீடுகளின் 'ேஷா கேஸ்'களில் வைக்கும் வகையில், சிறிய அலங்காரப் பொருட்களை தயாரிக்க முடியும்.எலக்ட்ரானிக் தொழில் சார்ந்த 'சுவிட்ச் போர்டு' உட்பட பொருட்களை, முழுக்க, முழுக்க மரத்தின் மூலமே செய்வதால், அப்பொருள் தரமானதாகவும், நீண்ட காலம் உழைக்கக் கூடியதாகவும் இருக்கும்.மேலை நாடுகளில், ஆண்டுக்கொரு முறை, மர வேலைப்பாடு சார்ந்த தொழில் சார்ந்தோருக்கான, போட்டி நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்படுகிறது. பிரம்மாண்ட முறையில், பல நாடுகளின் வர்த்தகர்கள் பங்கேற்கும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.போட்டியில், வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, மரவேலைபாடு தொழில் செய்வோர், பல புதிய விஷயங்களை புகுத்துவர். இதன் மூலம், அந்த தொழில் ஊக்குவிக்கப்படுகிறது. அந்த தொழில்முனைவோருக்கு, சந்தையில், அங்கீகாரம் கிடைக்கிறது. அதே போன்று, நமது நாட்டிலும், போட்டி நடத்தப்பட வேண்டும்; இதன் மூலம், எங்களை போன்ற, இளம் தொழில் முனைவோர், புதிய விஷயங்களை முயற்சி செய்வார்கள்; புகுத்துவார்கள்.ஒவ்வொரு தொழிலும், தலைமுறை தாண்டி நிலைப்பதில்லை. இருப்பினும், தொழிலில் புதுமையை புகுத்தி, வருமானம் தரும் தொழிலாக மாற்றும் பட்சத்தில், அதிகளவு இளைஞர்கள் இத்தொழிலை கற்றுக்கொள்வர். மர வேலைப்பாடு என்பது, அழியாத தொழில் என்பதால், இந்த தொழிலை கற்க இளைஞர்கள் முன்வர வேண்டும்.இவ்வாறு கூறும் விக்னேஷின் முகத்தில், தன்னம்பிக்கை ரேகைகள்! ஆம்... கலைத்திறனால், மரம் மீண்டும் உயிர்பெறும்போது, சாதிக்கத் துடிக்கும் சகோதரர்கள் வெற்றியை ஈட்டாமல் விடுவார்களா, என்ன...!


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு