செங்கல்பட்டு அரசு மகப்பேறு பிரிவில் போதிய வசதியை செய்து கொடுக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாய்மார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் சராசரியாக, 8000 பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்களில், 1000 பேர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். உள்நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையில் குணமடைந்து வீட்டுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பிரசவ வார்டில் குழந்தை பெற்ற பின் ஒதுக்கப்படும் வார்டில் குறைந்த அளவிலேயே படுக்கை வசதி உள்ளது. இதனால் ஒரே படுக்கையில் இரண்டு பேர் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. படுக்கை வசதி கிடைக்காத தாய்மார்கள் மட்டுமின்றி அவர்கள் பெற்றேடுக்கும் பச்சிளங் குழந்தைகளும் தரையில் பாயில் படுக்க வைக்கப்படுகின்றனர். இதனால் குழந்தைகள் மட்டுமின்றி தாய்மார்களும் மிக நெருக்கடியான இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், அரசியல் கட்சியினர், மருத்துவமனை ஊழியர்களின் உறவினர்கள் என சிபாரிசு கடிதத்துடன் வரும் நோயாளிகளுக்கு மட்டுமே படுக்கை மற்றும் பல்வேறு வசதி செய்து கொடுக்கப்பட்டு வருவதாகவும் அரசியல் கட்சியினரின் சிபாரிசு இல்லாமல் கிராமங்களில் இருந்து சிகிச்சைக்கு வருபவர்களுக்கு படுக்கை வசதி உட்பட அனைத்து வசதிகளும் மறுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பெண்கள் உட்பட அதிக அளவிலான நோயாளிகள், மருத்துவமனை வளாகங்களில் பாய்களில் படுத்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகைய நோயாளிகளுக்கு படுக்கை ஏற்படுத்தப் படாததால் பிரட், பால் உள்ளிட்ட பொருட்களும், இவர்களுக்கு சரியாக வழங்கப்படுவது இல்லை எனவும் அரசு வழங்கும் பொருட்கள் அனைத்தும் சிபாரிசு உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அரசியல் கட்சியினர் சிபாரிசுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதால் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற முடியவில்லை என அங்கு வரும் நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். இனி மழைக்காலத்தை தொடர்ந்து குளிர் காலம் வருவதால் இவ்வாறு தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் பட்சத்தில் தாய்மார்களுக்கு மட்டுமின்றி பச்சிளம் குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக மகப்பேறு பிரிவில் போதிய வசதியை செய்து கொடுக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாய்மார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்