லஞ்ச அதிகாரிகள் பெயர் வெளியிடுவேன்: பாதுகாப்பு கொடுத்தால்
சென்னை : லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர்கள், தற்போது கல்குவாரிகளின் ஒப்பந்ததாரர்களாக மாறிவிட்டனர். போலீஸ் பாதுகாப்பு கொடுத்தால் கனிமவளத்துறையில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து வெளியிடுவேன் என லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் கூறினார். காஞ்சிபுரம் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ், செய்தியாளர்களிடம் கூறியதாவது: காஞ்சிபுரத்தில் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும் கிரஷர் உரிமையாளர்களிடம், பணம் செலுத்தி ஜிஎஸ்டி ரசீதுடன் லாரிகளில் ஜல்லி ஏற்றி வருகிறோம். ஆனால் லாரிகளை மடக்கும் போலீசார், இடமாற்று சான்றிதழ் இல்லை என முறைகேடாக வழக்குப்பதிவு செய்கின்றனர். அரசு அனுமதி என்ற பெயரில் விதிமுறைகளுக்கு முரணாக, முறைகேடாக செயல்படும் கிரஷர் உரிமையாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை . கனிமவள கொள்ளை மற்றும் முறைகேடான ரசீது குறித்தும் ஊதுபத்தி புகை மற்றும் லைட்டர் காண்பித்தால் ரசீதில் உள்ள எழுத்துக்கள் அழிவது போன்ற ஊழல்கள் குறித்து, ஆளுநர், தம் கனிமவள உயர் அலுவலர்கள் என அனைவருக்கும் மனு வழங்கினோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை ஒரு காலத்தில் லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர்கள், தற்போது கல்குவாரிகளின் ஒப்பந்ததாரர்களாக மாறிவிட்டனர். காவல்துறை எனக்கு பாதுகாப்பு கொடுத்தால் கனிமவள கொள்ளையில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்த உரிய ஆவணங்களை வெளியிடத் தயாராக இருக்கின்றேன். அரசுக்கு வரவேண்டிய வருமானம் தனிநபருக்கு செல்கிறது. இது பற்றி தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஆளுநர், முதல்வர் மற்றும் கனிமவள உயர்மட்ட அலுவலர்கள் ஆகியோரிடம் மனு கொடுத்து முறையிட்டோம். அதற்கும் இதுவரை எவ்வித நடவடிக்கை இல்லை .இதனால், கனிமவள அதிகாரிகள் துணையுடன், கனிமவள கொள்ளை பற்றி மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், மாமல்லபுரம் வரும் பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் லாரி உரிமையாளர்கள் மிகப் பெரிய அறப்போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம் என்றார்.