சென்னை கார் ஓட்டுநரை மதுரையில் கொன்று வீசிய சம்பவம்: பெண் வழக்கறிஞர் உட்பட 4 பேர் கைது

சென்னையைச் சேர்ந்த டிராவல்ஸ் கார் ஓட்டுநரைக் கொன்று மதுரை மாவட்டம் மேலூர் அருகே கால்வாயில் வீசிய சம்பவம் தொடர்பாக திருச்சி பெண் வழக்கறிஞர், பொறியாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகிலுள்ள ஓடைக்கரையைச் சேர்ந்தவர் நாகநாதன் (50). இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். மனைவி, குழந்தைகள் சொந்த ஊரில் வசிக்கின்றனர். நாகநாதன் மட்டும் சென்னையில் டிராவல்ஸ் ஒன்றில் கடந்த 10 ஆண்டுகளாகக் கார் ஓட்டுநராக பணிபுரிந்தார். செப்.5 ல் பெண் உட்பட 4 பேர் குற்றாலம் சுற்றுலா செல்வதாகக் கூறி, நாகநாதன் காரில் சென்றனர். 6-ம் தேதி குற்றலாம் சென்ற அவர்கள், ஜாலியாக இருந்துவிட்டு, 9-ம் தேதி மீண்டும் சென்னைக்குத் திரும்பினர். மேலூர் கொட்டாம்பட்டியைக் கடந்தபோது, ஓட்டுநர் நாகநாதனின் செல்போன் 'சுவிட்ச் ஆஃப்' ஆனது. இது பற்றி அறிந்த தனியார் டிராவல்ஸ் உரிமையாளர் சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் செப்., 15-ல் மேலூர் அடுத்த கொட்டாம்பட்டி அருகே தாவரைப்பட்டி அருகிலுள்ள கால்வாயில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை கொட்டாம்பட்டி போலீஸார் மீட்டனர். விசாரணையில், அவர் நாகநாதன் எனத், தெரிந்தது. காருடன் மாயமான பெண் உட்பட 4 பேரை கொட்டாம்பட்டி ஆய்வாளர் நடடேசன், எஸ்ஐ ஆனந்த் அடங்கிய தனிப்படையினர் தீவிரமாகத் தேடினர். சென்னை அசோக் நகர் போலீஸாரும் அவர்களைத் தேடினர். இதற்கிடையில் திருச்சி உறையூரில் ஒர்ஷாப் ஒன்றில் நாகநாதன் ஓட்டிய கார் நிற்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், காரில் பயணித்தவர்கள் திருச்சி சங்கலியாண்டபுரம் விஜய் மகள் ஜெயசுதா (35), பசீர் அகமது மகன் பெரோஸ் அகமது(34), விராலிமலையைச் சேர்ந்த பொறியாளர் ஹரிகரன்(30), செங்கல்பட்டு ஜெகதீஸ்(25) என்பதும், காரை கடத்தும் நோக்கில் நாகநாதனை கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. 3 வாரத்துக்குப் பிறகு இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், ''வழக்கறிஞரான ஜெயசுதாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு புதுச்சேரி, திருச்சி, சென்னையில் வீடுகள் உள்ளன. இவர் நண்பர்களுடன் சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டவர். இதன்படியே கடந்த 5ஆம் தேதி சென்னையில் இருந்து குற்றாலம் சென்றுள்ளனர். திடீரென காரைக் கடத்தி விற்றிடலாம் என்ற எண்ணத்தில் ஓட்டுநரிடம் கேட்டுள்ளனர். இதற்கு அவர் மறுக்கவே கொலை செய்து, கொட்டாம்பட்டி அருகே வீசியுள்ளனர். காரை திருச்சி உறையூரில் சர்வீஸுக்கு விட்டு விட்டு சென்னைக்கு தப்பினர். முதலில் காரை கண்டுபிடித்தபின், ஜெயசுதா உட்பட 4 பேரையும் பிடித்தோம். இதுவே அவர்களின் முதல் குற்றச் சம்பவம் என்பதும் தெரிகிறது'' என்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்