சுஜித்தின் உடல் மணப்பாறையை அடுத்த பாத்திமாபுதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை சுஜித்தின் உடல் மணப்பாறையை அடுத்த பாத்திமாபுதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுஜித் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், நடிகர் விமல் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மெழுகுவத்தி ஏந்தியும் மாலைகள் இட்டும் சுஜித்துக்குப் பொதுமக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் வீட்டுக்குப் பின்புறம் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை சுஜித், கடந்த அக்டோபர் 25-ம் தேதி மாலை 5.40 மணியளவில் தவறி விழுந்தான். குழந்தையை உயிருடன் மீட்பதற்காக 80 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற மீட்புப் பணி தோல்வியில் முடிந்தது. சிறுவன் சுஜித், உயிரிழந்துவிட்டதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நள்ளிரவில் அறிவித்தார்.அதிகாலை 4.30 மணியளவில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து சுஜித்தின் உடல் மீட்கப்பட்டது. மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரதேப் பரிசோதனை முடிந்து குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்னர் மணப்பாறையை அடுத்த பாத்திமாபுதூர் கல்லறையில் குழந்தை சுஜித்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அஞ்சலிக்குப் பின்னர் குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுஜித் விழுந்த ஆழ்துளைக் கிணறு மற்றும் மீட்புப் பணிக்காகத் தோண்டப்பட்ட குழி ஆகியவை கான்க்ரீட் கலவையால் மூடப்பட்டன.