பிசிசிஐ தலைவராகிறார் சவுரவ் கங்குலி? ஐபிஎல் தலைவராக பிரிஜேஸ் படேலுக்கு வாய்ப்பு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட அதிகமான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. அதேபோல ஐபிஎல் தலைவராக இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளர் என்.ஸ்ரீனிவாசனின் ஆதரவாளர் பிரிஜேஷ் படேல் தேர்வு செய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓய்வுபெற்ற நீதிபதி லோதா அளித்த பரிந்துரையின் அடிப்படையில், பிசிசிஐயில் உள்ள குறைகளைக் களைவதற்காக வினோத் ராய் தலைமையில் நிர்வாகக் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்த நிர்வாகக் குழுவின் (சிஓஏ) 33 மாதங்கள் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. அதுமட்டுமல்லாமல் வரும் 23-ம் தேதிக்குள் பிசிசிஐ அமைப்புக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சிஓஏ தெரிவித்திருப்பதால், வேட்பாளர்கள் தேர்வு தீவிரமாகியுள்ளது. கடந்த இரு நாட்களாக டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை கருத்தொற்றுமை அடிப்படையில் பிசிசிஐ ஒருமித்த வேட்பாளராகத் தேர்வு செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏனென்றால், பிசிசிஐ தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்றுதான் கடைசி நாளாகும். ஆதலால், கருத்தொற்றுமை அடிப்படையில் கங்குலி மட்டும் வேட்புமனுத் தாக்கல் செய்தால், அவரே தலைவராக வருவார் எனத் தெரிகிறது. ஆனால், அதற்குப் பிரதிபலனாக, 2021-ம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கங்குலி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்றும் பேசப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இதற்கு கங்குலி சம்மதித்துவிட்டாரா என்பது தெரியவில்லை. பிசிசிஐ அமைப்பின் தலைவராக கங்குலி தேர்வு செய்யப்பட்டால், செயலாளராக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது. இதற்கிடையே பிசிசிஐ தலைவர் பதவிக்கு கங்குலி, பிரிஜேஷ் படேல், அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா ஆகிய மூவருக்கும் இடையேயும் போட்டி நிலவுவதாகவும் ஒருதரப்பினர் கூறுகின்றனர். ஒரு வேளை கங்குலி தலைவராகிவிட்டால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா செயலாளராகவும், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூரின் இளைய சகோதரர் அருண் துமால் பொருளாளராகவும் தேர்வு செய்யப்படலாம். இதற்கிடையே டெல்லியில் அனுராக் தாக்கூர், சவுரவ் கங்குலி, என் ஸ்ரீனிவாசன், ராஜீவ் சுக்லா, நிரஞ்சன் ஷா ஆகியோர் கடந்த சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் சந்தித்துப் பேசியுள்ளார்கள். ஆனால், இந்தச் சந்திப்பின் விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. ஆனால் பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், கருத்தொற்றுமை அடிப்படையில் ஒருமித்த வேட்பாளராக கங்குலி வேட்புமனுத் தாக்கல் செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். அவ்வாறு கங்குலி வேட்புமனுத் தாக்கல் செய்தால் அவர்தான் பிசிசிஐ அமைப்பின் அடுத்த தலைவராக வருவார். ஐபிஎல் அமைப்பின் தலைவராக பிரிஜேஷ் படேல் தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிவிக்கின்றன. தற்போது மேற்கு வங்க மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கங்குலி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்