வில்லிவாக்கம் க்ரைம் இன்ஸ்பெக்டர் : கையுங்களவுமாகப் பிடித்தது லஞ்ச ஒழிப்புத்துறை

சென்னை வில்லிவாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் நிலம் விவகாரத்தில் பஞ்சாயத்து பேசி குறிப்பிட்ட தொகையை வீட்டில் வைத்து லஞ்சமாக வாங்கும்போது, லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையுங்களவுமாகப் பிடித்தனர். சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வசிக்கும் இரண்டு நபர்களுக்கிடையே இடம் சம்பந்தமாக பஞ்சாயத்து இருந்துள்ளது. இந்த விவகாரம் வில்லிவாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் தமிழழகனிடம் ஒரு பக்கத்து நபரால் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மறுதரப்பை அழைத்து கட்டப் பஞ்சாயத்து பேசிய குற்றப்பிரிவு ஆய்வாளர் தமிழழகன் அவர்களை மிரட்டியுள்ளார். அவர்களிடம் ரூ.1 லட்சம் லஞ்சமாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை சிட்டி 2 டிஎஸ்பி லவக்குமார் தலைமையிலான டீம் குற்றப்பிரிவு ஆய்வாளர் தமிழழகனை மடக்கிப் பிடிக்கத் திட்டமிட்டது. முதற்கட்டமாக ரூ.20 ஆயிரம் பணத்துடன் வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கச் சொல்லியுள்ளனர். அதன்படி சம்பந்தப்பட்ட நபர் இன்று ரூ.20 ஆயிரம் பணத்துடன் வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஸ்டேஷனுக்கு வந்து கொடுக்க வேண்டாம் என்றும் அண்ணா நகர் போலீஸ் குடியிருப்பில் உள்ள தனது வீட்டுக்கு வருமாறும் குற்றப்பிரிவு ஆய்வாளர் தமிழழகன் கூறியுள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை புகார் அளித்தவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கொடுத்து மறைவாகக் காந்திருந்தனர். அப்போது திட்டமிட்டபடி ரூ.20 ஆயிரம் பணத்துடன் அண்ணா நகர் காவலர் குடியிருப்புக்குச் சென்றார். பணத்தைக் கொடுக்கும்போது லஞ்ச ஒழிப்பு போலீஸார், குற்றப்பிரிவு ஆய்வாளரை பணத்துடன் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை அருகிலுள்ள அண்ணா நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். விசாரணைக்குப் பின் தமிழழகன் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.