டிரைவிங் லைசென்ஸ் பெற வந்துவிட்டது தொழில்நுட்பம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள வாகனம் ஓட்டும் திறனை மதிப்பீடு செய்து அதன் மூலமாக ஓட்டுநர் உரிமம் விநியோகிக்க வழிவகை செய்யும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்தியாவில் சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. HAMS எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பத்தை ஸ்மார்ட்போன்களிலேயே பயன்படுத்த முடியும். செல்போனின் முன் மற்றும் பின் பக்க கேமராக்கள், சென்சார்கள், ஆகியவை வாகனம் ஓட்டுபவரின் திறனை கண்காணிக்கும். ரிவர்ஸ் பார்க்கிங், எஸ் வடிவில் வளைத்து ஓட்டுவது போன்ற சோதனைகளின் மூலம், ஓட்டுநரின் திறன் கண்காணிக்கப்படும். ஓட்டுநரின் முகபாவனைகளும் கண்காணிக்கப்பட்டு மதிப்பிடப்படும். இதை வைத்து அந்த ஓட்டுநருக்கு உரிமம் வழங்கப்படும். இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஓட்டுநர் உரிமம் வழங்கும் நடைமுறையானது உத்தரகாண்ட் தலைநகர் டேராடூன் RTO அலுவலகத்தில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஹாம்ஸ் தொழில்நுட்பம் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிப்போரில் 50 விழுக்காட்டினர் மட்டுமே தேர்ச்சி பெறுவதாகக் கூறப்பட்டுள்ளது. ஹாம்ஸ் மூலம், ஓட்டுநர் உரிமம் பெறும் நடைமுறையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரமுடியும் என்றும், சோதனையை மதிப்பீடு செய்வதை எளிமையாக்க முடியும் என்றும் அதை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.