விரைவில் அறிவிப்பு:அரசியல்உள்ளாட்சி தேர்தல் தலைவர் பதவிக்கு பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் பதவிகளுக்கு இட ஒதுக்கீட்டின் படி பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு வசதியாக பல்வேறு அடிப்படை பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீட்டின் படி பட்டியல் தயாரிக்கும் பணியை உள்ளாட்சி அமைப்புகள் செய்து வருகிறது. இது தொடர்பாக உள்ளாட்சி அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது : உள்ளாட்சி அமைப்புகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களின் மக்கள் தொகை விகிதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த இட ஒதுக்கீடானது சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும். இதைத்தவிர்த்து பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதன்படி மாநகராட்சி மன்ற உறுப்பினர், நகராட்சி உறுப்பினர், டவுன் பஞ்சாயத்து உறுப்பினர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், டவுன் பஞ்சாயத்து தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், கிராம ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு இடஒதுக்கீட்டின் படி பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பட்டியல் விரைவில் இறுதி செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.