பணி நியமன ஆணைகளை போலியாக தயாரித்து கொடுத்துள்ளனர்

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி, 11 பேரிடம் 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரில் ஒருவனை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சியை சேர்ந்த 11 பேருக்கு பொன்மலை ரயில்வே மண்டலத்தில் வேலை வாங்கி தருவதாக, சென்னையை சேர்ந்த சத்தியமூர்த்தி மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் கூறியுள்ளனர். தாங்கள் ரயில்வேயில் பணியாற்றுவது போலவும், ரயில்வே ஊழியர் சங்க நிர்வாகிகள் பலரை தெரியும் என்றும் நம்ப வைத்துள்ளனர். ஆளுக்கு ஏற்ப பேரம் பேசி 11 பேரிடம் இருந்தும் 60 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு, பணி நியமன ஆணைகளை போலியாக தயாரித்து கொடுத்துள்ளனர். வேலைகிடைத்த மகிழ்ச்சியில் சென்னை வந்தவர்களிடம், ஆவணத்திற்கு தேவை என்று கூறி மேலும் தலா 5 ஆயிரம் ரூபாயை வாங்கி கொண்டு இருவரும் தலைமறைவாகி விட்டனர். மோசடி செய்யப்பட்டதை தாமதமாக உணர்ந்த 11 பேரும் ரயில்வே போலீசில் புகார் அளித்தனர். இந்த நிலையில் சத்தியமூர்த்தி சென்னை எழும்பூரில் இருந்ததை அறிந்த ரயில்வே போலீசார், அவனை பிடித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தலைமறைவாக உள்ள பாலாஜியை தேடி வருகின்றனர்.