மீட்க வருகிறது 8 கோடி ரூபாய் மதிப்புள்ள ஓன்ஜிசியின் அதி நவீன ரிக் மிஷின்!

திருச்சி: 8 கோடி ரூபாய் மதிப்புள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ரிக் இயந்திரத்தை கொண்டு, துளைபோட்டு, சுஜித்தை மீட்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன. திருச்சி அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணறு ஒன்றில், விழுந்துள்ளார். மீட்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக 30 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருந்த சுஜித் தற்போது 85 அடி ஆழத்திற்கு கீழே இறங்கி உள்ளார். இதையடுத்து புதிய டெக்னிக்கை, பயன்படுத்தி குழந்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை சிக்கி உள்ள ஆழ்துளை கிணற்றுக்கு அருகே மற்றொரு பள்ளம் தோண்டி சுரங்கம் அமைத்து, 3 தீயணைப்பு படை வீரர்கள் உள்ளே அனுப்பி குழந்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுமார் மூன்று மீட்டர் தூரத்தில் இந்த பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ரிக் எனப்படும் கருவி இதற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த அதி நவீன கருவியின் விலை மட்டுமே 8 கோடி ரூபாய். அந்த அளவுக்கு இதில், நவீன வசதிகள் உள்ளன. இது எண்ணை கிணறுகள் உள்ள பகுதிகளில் எளிதாக துளையிட்டு செல்ல பயன்படுத்தப்படுகிறது. செல்போன் டவர் போல மிக உயரமானது. ஆனால் இந்த கருவியை நிகழ்வு இடத்துக்கு வந்து சேர்வதற்கு குறைந்த பட்சம் 4 மணி நேரம் ஆகுமாம். அதன்பிறகு 90 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு சுமார் 4 மணி நேரம் ஆகும். எனவே நாளை அதிகாலையில் தான் குழந்தையை மீட்பதற்கான, வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே அனைத்து உபகரணங்களுடன், சுரங்கத்தின் வழியே உள்ளே சென்று குழந்தையை மீட்பதற்காக, 3 தீயணைப்பு படை வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நேற்று இரவு, நிகழ்விடத்திற்கு சென்ற அமைச்சர், விஜயபாஸ்கர் இன்னமும் அங்கேயே இருந்து பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.