லலிதாஜூவல்லரியில் கைவரிசை காட்டியது வடமாநிலகொள்ளையர்கள் என காவல்துறையினர் உறுதி

திருச்சி லலிதா ஜுவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், புதுக்கோட்டையில் தங்கியிருந்த வடமாநில இளைஞர்கள் 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டார்க் நைட் என்ற ஹாலிவுட் பட பாணியில் முகத்தில் ஜோக்கர் முகமூடி அணிந்தபடி திருச்சி லலிதா ஜுவல்லரியின் சுவற்றில் துளைபோட்டு நுழைந்த கொள்ளையர்கள் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க வைர நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள லலிதா ஜுவல்லரியில் காவலாளிகள், கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. கடையின் பின்புறம் ஏசி மெஷின்கள் அமைக்கப்பட்டிருந்த சுவர் வழியாகத் துளையிட்டு உள்ளே புகுந்து தரை தளத்தில் இருந்த தங்க நகைகளை வாரிச்சுருட்டிச்சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மொத்தம் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போயுள்ளதாக கிரண்குமார் தெரிவித்துள்ளார். சிசிடிவி காமிராவில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு ஜோக்கர் போல முகமூடி அணிந்து வந்திருப்பதால் வடமாநில கொள்ளையர்கள் என்பதை கண்டறிந்த காவல்துறையினர் 7 தனிப்படைகள் அமைத்து திருச்சி மட்டுமல்லாது, பக்கத்து மாவட்டங்களில் உள்ள தங்கும் விடுதிகளிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொள்ளை சம்பவம் நடந்த பின்னர் சந்தேகத்துக்கு இடமான வட மாநிலத்தவர்கள் சிலர் புதுக்கோட்டைக்கு தப்பிச்சென்ற தகவல் கிடைக்க போலீசார் புதுக்கோட்டை விரைந்தனர். அங்குள்ள டைமன்ட் தங்கும் விடுதியில் வட மாநில கும்பல் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்து விட்டு டைமண்ட் தங்கும் விடுதியின் 2 வது மாடியில் வட மாநிலத்தவர் தங்கி இருந்த அறைக்குள் அதிரடியாக நுழைந்த காவல்துறையினர் அங்கிருந்த 5 பேரை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரித்துக் கொண்டிருந்த போது வெளியில் இருந்து வந்த அப்துல்லா சேக் என்பவன் காவல்துறையினரை பார்த்ததும் 2 வது மாடியில் இருந்து குதித்து தப்ப முயன்றான். தலை தரையில் மோதியதால் அப்துல்லா ஷேக்கிற்கு தலையில் வெட்டு விழுந்தது. அவனுக்கு புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, திருச்சிக்கு கொண்டுவரப்பட்ட 5 இளைஞர்களிடம் போலீசார் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர, கொள்ளையர்கள் சத்திரம் பேருந்து நிலையம் அருகே முகமூடி வாங்கியதாகக் கூறப்படுவதால், யாரிடம் வாங்கினார்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)