சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 72 மணி நேரமாகிவிட்டது: மீட்புப் பணியின் தற்போதைய நிலை என்ன?

நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுஜித் தவறி விழுந்து இன்று (அக்.28) மாலை 5.40 மணியுடன் 72 மணி நேரமாகிவிட்டது. லேசான மழை பெய்துவரும் நிலையில் இரண்டாவது ரிக் இயந்திரம் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்றுவருகிறது. குழந்தை சுஜித்தை மீட்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். என்.எல்.சி., ஓஎன்ஜிசி, எல் அண்ட் டி நிறுவன நிபுணர்களின் ஆலோசனைப்படி மீட்புப் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அக்.25 மாலை 5.40-க்கு தொடங்கிய துயரம்.. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ. இவருடைய மனைவி கலாமேரி. இவர்களுடைய மகன்கள் புனித் ரோசன் (வயது 4), சுஜித் வில்சன் (வயது 2). கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணி அளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது. ஆரம்பத்தில் ஜேசிபி பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்ட நிலையில் பாறைகள் தென்பட்டதால் மீட்புப் பணிக்காக ரிக் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. முதல் ரிக் இயந்திரம் 35 அடி ஆழம் வரை தோண்டிய நிலையில் பழுதானது. இதனையடுத்து நேற்று (அக்.27) நள்ளிரவு இரண்டாவது ரிக் இயந்திரம் துளையிடும் பணியைத் தொடங்கிய நிலையில் இன்று (திங்கள்) காலை இயந்திரம் பழுதானது. 45 அடி துளையிடப்பட்ட நிலையில் ரிக் இயந்திரம் பழுதானதால் சிறிது நேரம் மீட்புப் பணி தடைபட்டது. தொடர்ந்து அமைச்சர்கள் அதிகாரிகள் ஆலோசனைக்குப் பின்னர் போர்வெல் இயந்திரம் மூலம் குழி தோண்டுவதைத் தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. 2000 குதிரை திறன் கொண்ட போர்வெல் இயந்திரம் மூலம் 6 இடங்களில் துளையிடப்பட்டது. 65அடி ஆழத்தை எட்டிய நிலையில் மீண்டும் ரிக் இயந்திரம் மூலம் அகலப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடப்பட்ட பின்னர் ரிக் இயந்திரத்தால் துளையிடுவது எளிதாக இருப்பதாக களப்பணியாளர்கள் கூறினர். ஆகையால் 65 அடி ஆழம் வரை ரிக் இயந்திரம் துளையிட்டு அகலப்படுத்திய பின்னர் மீண்டும் போர்வெல் பயன்படுத்தி எஞ்சிய பகுதியில் முந்தைய பாணியில் துளையிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் குழந்தை சுஜித் வில்சனுக்காக பிரார்த்திப்பதாகப் பதிவிட்டதோடு மீட்புப் பணிகளுக்கு மத்திய அரசு உதவும் என்றும் கூறியிருந்தார். தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "குழந்தை நல்ல முறையில் மீட்கப்படும் என நம்பிக்கை உள்ளது. மீட்புப் பணியில் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. தன் வீட்டு பிள்ளை போல எண்ணி அத்தனை ஊழியர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்" எனக் கூறினார். காலையில், துணை முதல்வர் துணை முதல்வருடன் மீட்புப் பணிகளைப் பாரையிட்ட ரவீந்திரநாத் எம்.பி., "குழந்தையை மீட்பதில் தமிழ்நாடு அரசு தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது எடுக்கப்பட்டுள்ள முயற்சி வெற்றி பெறும் என நம்பலாம். இன்று இரவுக்குள் குழந்தையை மீட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" எனக் கூறியிருந்தார். இதற்கிடையில் பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூட மத்திய குழந்தை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக கலெக்டர்கள் பயனற்ற ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து உடனடியாக மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தொலைபேசியில் கேட்டறிந்தார் லதா ரஜினிகாந்த். குழந்தைக்கு சுவாசம் செல்வதில் தடையேதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தற்போது களத்தில் மீட்புப் பணியில் 100 பேர் ஈடுபட்டிருக்கின்றனர். சிறுவன் இருக்கும் ஆழ்துளை கிணற்றுக்குள் தொடர்ந்து ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. கேமரா மூலம் கண்காணிப்பும் நடைபெறுகிறது. சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி இறுதிவரை தொடரும். எக்காரணம் கொண்டும் பணி பாதியில் நிறுத்தப்படாது என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் காலையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை சுஜித் பாதுகாப்பாக உயிருடன் மீட்கப்பட தமிழகம் தாண்டி தேசம் முழுவதும் ஏன் கடல் கடந்து இலங்கை வரையிலும் பிரார்த்தனைகள் செய்யப்பட்டு வருகின்றன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு