நியூஸ்7 தமிழின் தமிழ் ரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சியில் நீதியரசர் கிருபாகரன் முன்வைத்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்று செயல்படுத்தும் என அதே மேடையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.

தமிழர்களை பெருமை படுத்தும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ் ரத்னா நிகழ்ச்சியை நியூஸ்7 தமிழ் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், மேடையில் உரையாற்றினார். அப்போது, தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தும் பழமையான இடங்களுக்கு பள்ளி குழந்தைகளை சுற்றுலா பயணம் கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதன் மூலம் தமிழர்களின் பெருமைகள் குறித்து நம் சமூகத்திற்கு தெரியவரும் எனவும் அவர் குறிப்பிட்டார் இதன் பின் மேடையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நீதிபதி கிருபாகரனின் கோரிக்கையை குறிப்பிட்டு பேசினார். அப்போது, தொன்மையான தமிழர்களின் பண்பாட்டை சித்தரிக்கும் வகையிலும், தமிழர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள் என்பதை வெளிப்படுத்தும் அகழ்வாராய்ச்சி பகுதிகளுக்கு பள்ளி குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்ல தம்முடைய அரசு ஏற்பாடு செய்யும் என உறுதியளித்தார். அமெரிக்காவின் ஹார்வேர்ட் பல்கலை கழகத்தின் தமிழ் இருக்கைக்காக நிதியுதவியளிக்க நீதிபதி கிருபாகரன் தன்னிடம் கோரிக்கை வைத்தாகவும். அதன் காரணமாக, ஹார்வேர்ட் பல்கலை கழக தமிழ் இருக்கைக்கு தமிழக அரசு 10 கோடி ரூபாய்யை நிதியுதவி அளித்ததாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். முன்னதாக விருது மேடையில் உரையாற்றிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார், தமிழர்களின் பெருமையையும் தமிழர்களின் சாதனைகளையும் பறைசாற்றி பேசினார். நீதிபதியின் வேண்டுகோளை மேடையிலேயே ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்ததை பார்வையாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் பாராட்டி புகழ்ந்தனர்