வெண்ணை உருண்டை பாறையை சுற்றி பார்க்க இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சுற்றுலா தலமாக விளங்கும் மாமல்லபுரத்தில் சமீபத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்கள் கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணை உருண்டை பாறை ஆகிய இடங்களை சுற்றி பார்த்தனர். இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பையொட்டி மாமல்லபுரத்தை அழகுபடுத்தும் பணிகள் நடந்தன. இதையடுத்து சுற்றுலா தலங்களை பார்க்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இரு தலைவர்கள் சந்திப்பு முடிந்தபிறகு சுற்றுலா பயணிகளுக்கான தடை நீக்கப்பட்டது. இதையடுத்து மாமல்லபுரத்தில் சுற்றுலா இடங்களை காண தினமும் பொதுமக்கள் வருகிறார்கள். அழகுபடுத்தப்பட்ட அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை பகுதி, கடற்கரை கோவில், ஐந்து ரதம் ஆகிய இடங்களை காண ஆர்வமுடன் வந்தவண்ணம் உள்ளனர். சில நாட்களாக பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் வருகிறார்கள். மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மாமல்லபுரத்தில் குவிந்துள்ளனர். வெண்ணை உருண்டை பாறை அருகே டிக்கெட் கவுண்டர் அமைக்கப்பட்ட காட்சி. இந்த நிலையில் வெண்ணை உருண்டை பாறையை சுற்றி பார்க்கவும் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று வெண்ணை உருண்டை பாறை அருகே டிக்கெட் கவுண்டர் அமைக்கப்பட்டது. இதில் ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.600 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மாமல்லபுரத்தில் ஐந்து ரதம், கடற்கரை கோவில் ஆகியவற்றை சுற்றி பார்க்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது வெண்ணை உருண்டை பாறையை பார்க்கவும் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது குறித்து தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரம் வருகையையொட்டி சுற்றுலா இடங்கள் அழகுபடுத்தப்பட்டு சீர் செய்யப்பட்டன. இதில் வெண்ணை உருண்டை பாறையை சுற்றியுள்ள பகுதிகளில் கொரியன் புல் தரைகள் அமைக்கப்பட்டது. இது போன்று பல வசதிகள் செய்யப்பட்டன. இதையடுத்து வெண்ணை உருண்டை பாறை பகுதியை கூடுதல் கவனத்துடன் பராமரிப்பு செய்வதற்காக இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது” என்றார். புராதன சின்னங்களில் அறிவியல் நிபுணத்துவம் உடைய சிற்பமாக வெண்ணை உருண்டை பாறை திகழ்கிறது. இந்த பாறையை தாங்கி பிடிப்பது போல் போட்டோ எடுக்க உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆசை படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்